இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்த சொகுசு கார்... இளம்பெண் பலி; சிகிச்சையில் 5 மாத குழந்தை
மும்பையில் 5 மாத கைக்குழந்தையுடன் பலூன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்தது சொகுசுக் கார்.
மும்பையில் 5 மாத கைக்குழந்தையுடன் பலூன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்தது சொகுசுக் கார். கூடவே அந்தப் பெண்ணின் உயிரும் பிரிந்தது. தூக்கி வீசப்பட்ட 5 மாத குழந்தை கைகளில் கடுமையான எலும்பு முறிவுடன் உயிருக்குப் போராடுகிறது.
ஹிட் அண்ட் ரன் வழக்குகள் இந்தியாவில் அதிகம். அதுவும் ஹை ப்ரொஃபைல் வழக்குகள் தான் மிகவும் அதிகம்.
இந்தியா இந்த வகையில் சந்தித்த பிரபல வழக்கு சல்மான் கான் வழக்கு. 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2015ல் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் மும்பை சுமேர் நகர் மேம்பாலத்துக்குக் கீழ் கோரா கேந்திரா சிக்னல் அருகே இன்று காலை 8 மணியளவில் ஒரு கோர ஹிட் அண்ட் ரன் கார் விபத்து நடந்துள்ளது.
லாட்பாய் பவாரியா என்ற அந்தப் பெண்ணுக்கு வயது 29. அவருடைய கணவர் தன்ராஜ். வயது 30. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது. இவர்களின் வீடு மீரா பயாந்தர் பகுதியில் உள்ளது. இவரும் தினமும் போரிவல்லி பகுதிக்கு பலூன் மற்றும் பல்புகள் விறக் வருவர்.
அப்படித்தான் கடந்த செவ்வாய்க்கிழமையும் காலையிலேயே வந்துள்ளனர். 9 மணிக்கெல்லாம் போரிவல்லி வந்துவிட்டனர். லாட்பாய் கோரா கேந்திரா சிக்னல் அருகே நின்று பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். மகன் ரிவான்ஷை இடுப்பில் ஏந்தியிருந்தார். அவரது கணவர் அருகில் உள்ள பட்டாட் சாலையில் பல்புகளை விற்றுக் கொண்டிருந்தார்.
இரவு 8 மணியளவில் லாட்பாய் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து சக வியாபாரி ஒருவர் தன்ராஜுக்கு தகவல் சொல்ல தன்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது லாட்பாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். குழந்தையும் காயங்களுடன் கிடந்தது. இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். லாட்பாய் அதிகாலை 2.30 மணியளவில் இறந்தார். குழந்தை சிகிச்சையில் உள்ளது.
போரிவல்லி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். குறிப்பிட்ட விபத்துப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அதனால் போலீஸார் மற்ற கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளனர். போரிவல்லி பகுதி ஓரளவு மேல்தட்டு வசிக்கும் பகுதியே.
உதயநிதி ஸ்டாலினின் மனிதன் படமும் இதுபோன்ற கார் விபத்தையே பேசியிருக்கும். அதில் பணக்கார இளைஞர் திவான் பாபுவுக்கு ஆஜராகும் வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ், சாலை என்பது வாகனங்கள் செல்வதற்கான இடம். அங்கே ஏன் இந்த மக்கள் படுத்து உறங்கினார்கள் என்று கேட்பார். அதுபோல் இந்த போரிவல்லி விபத்தில் ஆஜராகும் வக்கீலும் சாலையில் ஏன் பலூன் விற்றார் என்று கேட்காமல் பெண்ணுக்கு நீதி கிடைத்தால் சரி!