10 நாள் குழந்தையுடன் தாய் தீக்குளிக்க முயற்சி: காதல் திருமணம் கசந்தது ஏன்?
வயிற்றில் குழந்தை இருக்கும் போது அடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டுகிறார் காதல் மனைவி.
சேலத்தில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பச்சிளம் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் 30 பவுன் வரதட்சணை கேட்டு நந்தினியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் நந்தினி புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனிடையே நந்தினிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் பிறந்து 10 நாட்கள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்க வந்த நந்தினி திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இது பற்றி நந்தினி கூறுகையில், நீண்ட ஆண்டுகளாக காதலித்து பல எதிர்ப்புகளை கடந்து திருமணம் செய்து கொண்டோம், காதலிக்கும் போது தன்மீது பாசமாக இருந்த கணவர் திருமணத்திற்கு பிறகு அவரது தாய் பேச்சை கேட்டுக்கொண்டு தன்னை அடுத்து துன்புறுத்துகின்றனர் என்றும், ஒரு கட்டத்தில் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுது அடித்து ரத்த காயங்கள் ஏற்படுத்தியதாகவும் கூறினார். கழுத்துப் பகுதியில் அடித்து கணவரின் தாய் துன்புறுத்தியதாக கூறினார்கள். கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து வரதட்சனை கொடுமை செய்த மாமியார் மற்றும் கணவர் மீது பல இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தான் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட வந்ததாகவும், காவல்துறையினர் உள்ளே அனுமதிக்காததால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்ததாக கூறினார். உடனடியாக தனது கணவர் மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நந்தினி கோரிக்கை விடுத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.