திருவாரூர்: சுவரில் அடித்துக்கொன்று பாத்திரத்தில் பதுக்கப்பட்ட குழந்தை! கொடூரம் செய்த தாய், பாட்டி!
கமலேஷ் என்வருடன் ரேணுகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
திருவாரூரில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த வேடம்பூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகள் ரேணுகாவுக்கும், நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்துவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே 3 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரேணுகாவை பிரிந்து முத்து திருப்பூரில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
ரேணுகாவும் தனது தாய் வீட்டில் இருந்து குடவாசலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் அதே பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்வருடன் ரேணுகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக ரேணுகா கர்ப்பமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் பச்சிளம் குழந்தையை ரேணுகா கொன்று புதைத்து விட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கட்டப்பையில் வைத்து அருகிலுள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் தாயும், மகளும் சேர்ந்து கொடூரமாக அடித்துள்ளனர். அப்போது குழந்தை சாகாமல் அழுததால் ஆத்திரமடைந்து கழுத்தை நெறித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு கொண்டு சென்று பாத்திரத்தில் மூடி வைத்துள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வீட்டின் பின்புறம் குழிதோண்டி குழந்தையை புதைத்துள்ளதாக வலங்கைமான் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரவீந்திர பாபு முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற் கூறாய்வு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேணுகா, அவரது தாய் ரேவதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவாரூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்