ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அடிபிடி: வீதியில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்!
ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேரங்கள் வெளிப்படையாக அரங்கேறியதால் வீதியில் வீசப்பட்டது பணம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேரங்கள் வெளிப்படையாக அரங்கேறியதால் வீதியில் பணம் வீசப்பட் டுள்ளது.9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வரும் 20ம் தேதி பதவியேற்பு நடக்கிறது. அதற்குள் ஊராட்சி துணைத் தலைவருக்கான போட்டியில், வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்கள் களமிறங்கி உள்ளனர். அந்த வகையில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலுக்கான போட்டி அதிகரித்ததன் விளைவாக தற்போது வெளிப்படையாக பேரங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவராக கலிய மூர்த்தி வெற்றி பெற்றார். 9 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத் தலைவருக்கான போட்டி யில் ஆறுமுகம் மற்றும் சந்திர பாபு ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே இதில் ஒருவர் தன்னை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, சக உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். போட்டி பலமானதால், இவரும் எதையாவதுகொடுத்து பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையில், செலவுகளை தாராள மாக்கியுள்ளனர். அந்த வகையில் ஒரு உறுப்பினர் கை நீட்டி பணம் வாங்கியதை அறிந்த மற்றொரு போட்டியாளர், கை நீட்டி வாங்கியவரிடம் இரு இடங்களில் கை நீட்டி பணம் பெற்றது ஏன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து கை நீட்டி பணம் பெற்றதை, உரியவரிடமே கொண்டு சேர்க்க முயற்சிக்கிறார் அந்த உறுப்பினர். ஆனால் கொடுத்தவரோ பணத்தை பெற மறுத்து, கொடுத்தது கொடுத்ததாக இருக்கட்டும், வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் கை நீட்டி பணம் வாங்கியவர் திருப்பி எடுத்தவர மனமின்றி, கொடுத்தவரின் வீட்டு முன்பு பணத்தை வீதியில் வீசியெறிந்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்பகுதி மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க பணம் அப்படியே வீதியில் இருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க முன் வரவில்லை. இரு இடங்களில் கை நீட்டி பணம் பெற்றது ஏன் என மிரட்டல் விடுத்துள்ளார். சுமார் 10 மணி நேரமாக வீதியில் சிதறிக்கிடந்த அந்தப் பணத்தை வேறு வழியின்றி லஞ்சம் கொடுத்த நபரே வந்து பொறுக்கிச் சென்றுள்ளார். அப்பகுதி ஏழை மக்களும் கூலித் தொழிலாளிகளும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கே இவ்வளவு பணம் விளையாடுகிறதா? என்று வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்