(Source: ECI/ABP News/ABP Majha)
ஏடிஎம்களில் முதியவர்களை குறிவைத்து மோசடி...சீர்காழியில் இளைஞர் சிக்கியது எப்படி..?
சீர்காழியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி பணம் திருடி வந்த இளைஞரை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் கடந்த டிசம்பர் 28 -ம் தேதி பழையார் சுனாமி நகரை சேர்ந்த 50 வயதான மணிமொழி என்பவர் தனது வங்கிக் கணக்கில் 20,000 ரூபாய் பணம் செலுத்த வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த இளைஞர் இதனை பயன்படுத்தி முதலில் 2000 ரூபாய் தொகையை வங்கி கணக்கில் செலுத்தி சரி பார்த்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறியுள்ளார். பின்பு மீதமிருந்த 18,000 ரூபாய் தொகையை வங்கி கணத்தில் செலுத்தி விட்டதாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால் அந்த முதியவர் தனது வங்கி கணக்கில் தொகை சரிபார்த்த போது தனது வங்கி கணக்கில் 2000 ரூபாய் மட்டும் செலுத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இதுகுறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் முதலில் செலுத்தப்பட்ட 2000 ரூபாய் முதியவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதும், மீதம் 18000 ரூபாய் ஆயிரம் முதியவர் வங்கி கணக்கில் செலுத்தப்படாமல் வேறு ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், இதேபோல் டிசம்பர் 29 -ம் தேதி சீர்காழியை அடுத்த கீரா நல்லூர் பகுதியை சேர்ந்த 35 வயதான அமுதா என்பவரும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதே பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம்மில் தனது கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்றுள்ளார். அவர் வங்கி கணக்கில் 23 ஆயிரத்து 800 ரூபாய் பணம் இருந்துள்ளது. அமுதாவிற்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கத் தெரியாததால் அங்கு மாஸ்க் அணிந்து நின்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் தனது ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் கூறி பணம் எடுத்து தரஉதவி கேட்டுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் ஏ.டி.எமில் கார்டை செருகி பரிவர்த்தனை செய்து தங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வரவில்லை என்றும் சொல்லிவிட்டு வெளியில் வேகமாக சென்றுவிட்டார். இதன் பின்னர் அமுதா ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அமுதாவின் செல்போனிற்கு வங்கிக் கணக்கில் இருமுறை 10 ஆயிரம் ரூபாய் மற்றும் 3700 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததுள்ளது. இதனால் பதறிப்போன அமுதா சீர்காழி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்று வங்கி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விசாரித்தார். அவரது கணக்கை வங்கி அதிகாரிகள் பரிசோதித்து அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி பார்த்தபோது அந்த இளைஞர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றதும் அமுதாவின் கார்டை பயன்படுத்தி பணத்தை திருடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து அமுதா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகார்களின் பெற்றுக் கொண்ட சீர்காழி காவல்துறையினர் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தேடி வந்த நிலையில் இந்த நூதனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் மகன் இனியவன் என்பது தெரிய வந்தது. மேற்படி இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மட்டும் இதுபோல் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் இனியவனை கைது செய்து சீர்காழி ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.