ரயிலில் பயணித்த சிறுமிக்கு நடந்த கொடூரம் - சிக்கிய 57 வயதான முதியவர்...!
மயிலாடுதுறை அருகே ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சிறையிலடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை போலீஸார் கைது செய்து போக்சோ வழக்கில் சிறையில் அடைத்தனர்.
ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து நேற்றிரவு இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில் தஞ்சாவூர் மாவட்டம் நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த 57 வயதான சுந்தரவேலு என்பவர் பயணித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம் - வல்லம்படுகை இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவருக்கு சுந்தரவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் கூச்சலிட்ட சிறுமி
அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுந்தரவேலுவை இறக்கிய போலீஸார் அவரை மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போக்சோ வழக்கில் முதியவர் கைது
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையிலான போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சுந்தரவேலுவை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெரிந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தல்
குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.