Mayiladuthurai: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இங்கு விற்பனைக்கு இல்லை.. போர்டு வைத்த வியாபாரியை பாராட்டிய ஆட்சியர்...!
மயிலாடுதுறையில் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் 5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டமாக உருவாகி இரண்டாண்டுகள் ஆன நிலையில், ஆட்சியர் லலிதாவிற்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றார் மகாபாரதி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடனேயே தனது வேலைகளை துவங்க களத்தில் இறங்கினார். நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, ஆய்வு மேற்கொண்டு கள நிலவரத்தை தெரிந்து கொண்டார்.
'ஆயிரம் ஆனாலும், மாயவரம் போல் ஆகுமா' என்ற பெருமை கூற்று மயிலாடுதுறைக்கு இருந்தாலும், சிறு மழைக்கும் தாங்காமல் பேருந்து நிலையம், முக்கிய சாலைகள், சிறிய தெருக்கள் என்று பாகுபாடில்லாமல் சகதியாக, வடிகால் இல்லாமல் தண்ணீர் தேங்கி நிற்கும். அவ்வப்போது மழை நீருடன் சாக்கடை நீர் கலப்பது, தெருக்களில் வழிந்தோடுவது போன்ற பிரச்சனைகளை மக்கள் நிதம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கூட்ட நெரிசல், வணிக வளாகங்களின் அதிகரிப்பு போன்ற பலகாரணங்கள் இருந்தாலும், சூழலுக்கு ஏற்றாற்போல் தூய்மை பணிகளை மாற்றி மேற்கொள்ளாததும் முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில் புதிய ஆட்சியரின் ஆய்வில் முதலில் கண்ணில் பட்டது நகரின் சுத்தம் இன்மை. நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக இருப்பதை கண்டார். உடனே நகரத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்தடுத்த நாட்களில் வாயளவில் உத்தரவாக மட்டுமல்லாமல், தூய்மை பணிகள் நடந்துள்ளதா என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த செயல் அதிகாரிகளிடம் முனைப்பையும், மக்களிடத்தில் அவர் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
'தூய்மை நகரம் மயிலாடுதுறை'
இந்த நிலையில் மயிலாடுதுறை நகரத்தை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கில் 'தூய்மை நகரம் மயிலாடுதுறை' என்ற பெயரில் தூய்மை பணிகள் துவக்கி வைத்தார். இதனை அடுத்து 'தூய்மை நகரம் மயிலாடுதுறை' என்ற பெயரில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், வடிகால்கால்கள் ஆகியவற்றில் தூய்மை பணிகள் துவங்கியது. மாவட்டத்தின் முழுவதும் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
அவ்வகையில் இன்று மயிலாடுதுறை மகாதானத்தெரு, பெரிய கடைத்தெரு, கூறைநாடு ஆகிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 50 க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் புகையிலை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வகையில் 20 கடைகளில் சுமார் 5 டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அக்கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது ஆய்வின் போது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படாது என்று பெயர் பலகை வைத்துள்ள வணிகரை பாராட்டி சால்வை அணிவித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.