மயிலாடுதுறை காவல்துறை அதிரடி அறிவிப்பு! கஞ்சா, மது வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடுவது குறித்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடுவது குறித்த அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கஞ்சா மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் மொத்தம் 58 வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
வாகனங்களின் விவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுக்கா காவல் நிலையங்கள், மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆகியவற்றால் கஞ்சா மற்றும் மதுவிலக்கு தொடர்பான வழக்குகளில் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் ஏலம் விடப்படவுள்ள வாகனங்களின் பட்டியல் பின்வருமாறு.
* கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை: 01 நான்கு சக்கர வாகனம் மற்றும் 05 இரண்டு சக்கர வாகனங்கள்.
* மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை: 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 41 இரண்டு சக்கர வாகனங்கள்.
மொத்தம் 58 வாகனங்கள் இந்த பொது ஏலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்
இந்த பொது ஏலமானது மயிலாடுதுறையில் உள்ள உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
* ஏலம் நடைபெறும் நாள்: 21.01.2026.
* ஏலம் தொடங்கும் நேரம்: காலை 10.00 மணி.
ஏலத்திற்கு முன் வாகனங்களை பார்வையிடுதல்
ஏலம் எடுக்க விரும்புவோர் வாகனங்களின் நிலையை நேரில் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* தேதி: 20.01.2026.
* நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.
* இடம்: மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகம்.
விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நுழைவு சீட்டு பெற்று வாகனங்களை பார்வையிடலாம்.
பங்கேற்பு விதிமுறைகள் மற்றும் முன்பணம்
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் 21.01.2026 அன்று காலை 06.00 மணி முதல் 09.00 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். தாமதமாக வருபவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முன்பணம் செலுத்தும் விவரம்
* இரண்டு சக்கர வாகனங்களுக்கு: ரூ 1,000
* நான்கு சக்கர வாகனங்களுக்கு: ரூ 5,000
பதிவு செய்ய வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் உரிய முன்பணத்தை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். முன்பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏல களத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
விற்பனை மற்றும் ஜிஎஸ்டி (GST) விவரங்கள்
* ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் இறுதித் தொகையுடன் கூடுதலாக 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்படும்.
*ஏலம் எடுத்தவர்கள், அந்த வாகனத்திற்கான ஏலத் தொகையை உடனடியாக முழுமையாக செலுத்த வேண்டும்.
*தொகை செலுத்தப்பட்டவுடன், வாகனத்தை அன்றைய தினமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு
இந்த வாகன ஏலம் தொடர்பான மேலும் விரிவான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 96261-69492 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















