Crime: பதைபதைக்க வைத்த கொடூரம்.. சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து, சொந்த அண்ணனுக்கு அனுப்பியவர் கைது..
சில நாள்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குளிக்கும்போது அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை அந்த சிறுமியின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை, மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (21). அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் விஜய் பணியாற்றி வருகிறார்.
வீடியோ எடுத்து நாடகமாடிய நபர்
இவர், கடந்த சில நாள்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் குளிக்கும்போது அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை அந்த சிறுமியின் அண்ணன் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து அவருக்கு போன் செய்து ”இந்த வீடியோவை எனக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பினர். அதனை உனக்கு அனுப்பியுள்ளேன்” என விஜய் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் அண்ணன், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விஜய்யை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் விஜய் சிறுமி குளிக்கும்போது ரகசியமாக வீடியோ எடுத்து அதை அவளது அண்ணனுக்கே அனுப்பியது தெரிய வந்தது. இதனால், சிறுமியின் அண்ணனும், குடும்பமும், பதறிப்போயுள்ளனர். இதையடுத்து விஜய்யை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைத்தனர்.
போக்சோ விழிப்புணர்வு முகாம்
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் நாள்தோறும் போக்சோ வழக்குகள் பதிவான வண்ணம் உள்ளன. இந்நிலையில், நேற்று முன் தினம் (ஆக.08) சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் சென்னையிலுள்ள 148 பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் (POCSO ACT) குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனைகள் கிடைக்க 2012ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (Protection of Childrens from Sexual Offences Act-2012) குறித்தும் பெண் குழந்தைகள் அறியும் வண்ணம் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் முன்னதாக உத்தரவிட்டார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று முன் தினம் (ஆக.08) சென்னையிலுள்ள 148 பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர். இம்முகாம்களில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், இதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், Good touch மற்றும் Bad touch குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும் எனவும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாம்களில் 13,878 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தது குறிப்பிடத்தக்கது.