Crime: லிவ்-இன் கொடூரம்- முன்னாள் காதலி, 6 மாத குழந்தையின் கழுத்தறுத்து கொலை - கருக்கலைப்பால் விபரீதம்
Delhi Live in Murder: முன்னாள் காதலி மற்றும் அவரது தோழியின் 6 மாத குழந்தையை கொடூரமாக கொன்றதாக, டெல்லியில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Delhi Live in Murder: கருக்கலைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த கொடூர கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் கொலை - குற்றவாளி கைது
உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியை சேர்ந்த 23 வயதான நிகில் குமார் என்பவர், தனது முன்னாள் லிவ் - இன் பார்ட்னரான சோனல் ஆர்யா மற்றும் அவரது நண்பரின் 6 மாத குழந்தையை கொடூரமாக கொன்றதாக டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் காதலி சோனல் ஆர்யா கருவுற்று இருந்ததாகவும், அதனை கலைக்க உதவிய அந்த பெண்ணின் நண்பரை பழிவாங்கும் விதமாகவே அவரது 6 மாத குழந்தையை நிகில் கொன்றதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 மாத குழந்தையை கொன்றது ஏன்?
காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சோனல் ஆர்யா எனும் பெண் ம் ஃபுட் டெலிவெரி ஏஜெண்டான நிகில் உடன் லிவ் -இன் ரிலேஷன்ஷிப்பில் டெல்லியின் மஜ்னு கா டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சோனல் பிரிந்து வந்து தனது தோழி ராஷ்மி தேவியின் வீட்டில் கடந்த சில வாரங்களாக வசித்து வந்துள்ளார். அதேநேரம், கருவுற்று இருந்த சோனல் அதனை கலைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு ராஷ்மி தேவியின் கணவர் உதவியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த நிகில் ஆத்திரமடைந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை கையிலெடுத்துக் கொண்டு, ராஷ்மி தேவியின் வீட்டிற்கு வந்து அவரது 6 மாத குழந்தையையும், தனது முன்னாள் காதலி சோனலையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்காக குழந்தையை விற்ற நிகில்:
இதனிடையே, சோனல் மற்றும் நிகில் ஆகியோர் ஹல்த்வானி பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சந்தித்ததாகவும், அவர்களுக்கு 2024ம் ஆண்டில் ஒரு குழந்தை பிறந்ததும், அதனை பணத்திற்காக உள்ளூரிலேயே விற்றுவிட்டு, டெல்லி வசித்து வந்ததும்” காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தான், தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலி மற்றும் அவரது நண்பரின் 6 மாத குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்த நிகிலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
”மிருகத்தனமான செயல்பாடு”
இதுதொடர்பாக பேசிய சோனலின் சகோதரி, ”நிகில் குமார் எனது சகோதரியை மிகவும் சித்தரவதை செய்தார். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அடிப்பது, சத்தம் போடுவது என மோசமாக நடந்து கொண்டார். அவரை விட்டு விலகி செல்லவும் அனுமதிக்காமல் எனது தங்கையை மிரட்டினார். இதனை பொறுக்க முடியாமல் கடந்த ஜனவரி மாதம் அவரிடமிருந்து ஒருவழியாக சோனல் பிரிந்து வந்தார். தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நிகில் தவறாக பகிர்ந்து வந்ததால் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்தார்” என தெரிவித்துள்ளார். முன்னதாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றபோது கூட அடிக்கடி தொலைபேசியில் அழைத்து மிகவும் மோசமாக பேசுவது, திட்டுவது, மிரட்டுவது என மிருகத்தனமாக நடந்து கொள்வார் என்றும் சோனலின் குடும்பத்தினர் நிகில் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.





















