Crime: காதலனுக்காக திருமணத்தையே நிறுத்திய மருத்துவ மாணவி: கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பம்!
மகாராஷ்ட்ராவில் காதலனுக்காக திருமணத்தை நிறுத்திய மருத்துவ மாணவியை, அவரது குடும்பமே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் என்றால் எதிர்பார்ப்புகள் எந்தளவு நிறைந்துள்ளதோ, அந்த காதல் திருமணத்தில் முடிவதற்கு அந்தளவிற்கு எதிர்ப்புகளும் நிறைந்திருக்கிறது. பல சமயங்களில் இந்த எதிர்ப்புகளால் சொந்த மகன், மகள் என்றும் பாராமல் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளையே கொடூரமாக கொன்ற சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி பல இடங்களில் அரங்கேறியுள்ளது.
மருத்துவ மாணவியின் காதல்:
தற்போது, அப்படியொரு சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது நந்தேத் மாவட்டம். இங்கு 22 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அந்த பெண் ஹோமியோபதி மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளனர்.
ஆனால், அந்த பெண் அதே கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அவர்களது குடும்பத்தினரிடம் இதைக்கூறியுள்ளார். ஆனாலும், அவர்கள் அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அந்த பெண் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
நெரித்து கொன்ற குடும்பம்:
இதனால், மாப்பிள்ளை வீட்டார் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால், பெண்ணின் குடும்பத்தினர் அந்த மருத்துவ மாணவி மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் மூன்று உறவுக்காரர்கள் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்தது மட்டுமின்றி அந்த கொலையை மறைப்பதற்காக தடயங்களையும் அழித்துள்ளனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், போலீசார் விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உயிரிழந்த மாணவியின் தந்தை, சகோதரர் உள்பட 5 பேரை 302வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
காதலித்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட இளம்பெண்ணை தந்தை மற்றும் சகோதரரே இணைந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காதல் திருமணத்திற்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், அதே அளவில் பல இடங்களில் எதிர்ப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த எதிர்ப்புகள் பல இடங்களில் உயிரை எடுக்கும் அளவிற்கு கொடூரத்தின் உச்சத்திற்கே காதலர்களின் குடும்பங்களை அழைத்துச் செல்கிறது.
மேலும் படிக்க: காதலியுடன் முற்றிய சண்டை.. ஆத்திரத்தில் 70 லட்ச ரூபாய் பென்ஸ் காரை எரித்த இளம் மருத்துவர்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..