டிவியில் க்ரைம் நிகழ்ச்சி பார்த்து கொலைக்கான ஐடியா! ரயில் நிலைய பையில் பெண் உடல்! பகீர் சம்பவம்!
மகாராஷ்டிராவில் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி 15 வயது சிறுமியை கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி வன்ஷிதா ரத்தோட். இவர் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி காலை 11:15 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கு சென்றுள்ளார். வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை வெகுநேரமாகியும் அவர் திரும்பாததால் குடும்பத்தினர் வன்ஷிதாவை தேடி அழைந்துள்ளனர். அவரை பற்றிய தகவல் எங்கும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகாரளித்தனர்.
அடுத்த நாளான ஆகஸ்ட் 26 ம் தேதி வன்ஷிதாவின் சகோதரி மிதாலிக்கு வாலிவ் காவல் நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், ஒரு ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு பையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாகவும், அதை அடையாளம் காண காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் அந்த உடல் வன்ஷிதாதான் என அடையாளமும் காணப்பட்டது.
இதையடுத்து, இந்த கொலை தொடர்பாக 21 வயதான சந்தோஷ் மக்வானா மற்றும் விஷால் அன்பே ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், சந்தோஷ் மற்றும் விஷால் இருவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சிறு சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தனர் என்று தெரியவந்தது. மேலும், தாங்கள்தான் வன்ஷிதாவை கொலை செய்ததாகவும் ஒப்பு கொண்டனர்.
வழக்கின் முழுவிவரம் :
தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வன்ஷிதாவை கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர். சந்தோஷ் மற்றும் வன்ஷிதா கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓரிரு நாட்கள் ஒன்றாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில், இருவரின் சந்திப்பு குறித்து வன்ஷிதா குடும்பத்தினருக்கு தெரியவர, பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. சந்தோஷை வன்ஷிதாவின் தாயும், அவரது தோழியான மிதாலியும் தாக்கினர். இதன் காரணமாக தன்னை மீண்டும் சந்திக்க வேண்டாம் என்று கேட்டு வன்ஷிதாவும் தன்னை நடுரோட்டில் அறைந்துள்ளார்.
தன்னை அவமானப்படுத்திய அனைவரையும் பழி வாங்க துடித்த சந்தோஷ், ‘கிரைம் பேட்ரோல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் ஐடியாக்களை எடுத்துக் கொண்டு, தனது நண்பன் விஷாலுடன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ நாளான கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி சந்தோஷ் வன்ஷிதாவை அவனது நண்பனின் வீட்டிற்கு அழைத்து வந்து, பிற்பகல் வரை இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். இதை தொடர்ந்து வன்ஷிதா சந்தோஷிடம், “இதுதான் நமது கடைசி சந்திப்பு, இதற்கு பிறகு நான் உன்னை சந்திக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத சந்தோஷ் தன் நண்பனை விஷால் அழைத்து வன்ஷிதாவை குத்தும்படி சைகை செய்துள்ளார். விஷால் வன்ஷிதா வயிற்றில் மூன்று நான்கு முறை கத்தியுள்ளார். வன்ஷிதா வலியால் கத்தி துடிக்க, கத்துவதை தடுக்க வாயை இறுக்கமாக கட்டியுள்ளனர். பின்னர் தனது நண்பரிடம் இருந்த கத்தியை பறித்த சந்தோஷ், வன்ஷிதாவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இருவரும் இறந்த பெண்ணுக்கு விஷாலின் டி-ஷர்ட் மற்றும் பேண்டை அணிவித்து உடலை போர்வையில் போர்த்தி பையில் மூட்டை கட்டினர். பின்னர ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து விலே பார்லே ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலில் ஏறியுள்ளனர். மாலை 5.30 மணியளவில் நைகான் ஸ்டேஷனில் இறங்கிய அவர்கள், வசாய்க்கு ரயிலில் செல்வதற்கு முன், ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழே உள்ள புதர்களில் பையை வீசியுள்ளனர்.
வசாய் என்ற இடத்தில் இருவரும் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு விரார் நகருக்குச் சென்றனர். அங்கு அவர்களின் புகைப்படங்கள் ரயில்வேயின் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இரண்டு மணி நேரம் கழித்து வாசை ஸ்டேஷனுக்குத் திரும்பி அவர்கள், மொபைல் போன்களை அணைத்துவிட்டு ஜோத்பூர் எக்ஸ்பிரஸில் ஏறினர்” என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.