வயலுக்கு நடுவே குழி.. மனைவி மீது சந்தேகம் - குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தை..!
குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் தனது ஒரு வயது பெண் குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் சண்டையிட்டதைத் தொடர்ந்து தனது மூன்று மகள்களில் ஒருவரான ஒரு வயது குழந்தையை விவசாய வயலில் உள்ள ஒரு குழியில் உயிருடன் புதைத்து கொன்றதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். ரிசோட் தெஹ்சில் வாடி-வகாட் கிராமத்தில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. ஒரு நாள் கழித்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் தம்பதியர் வசித்து வருகின்றனர்.குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் குகே தம்பதியருக்கு மூன்று மகள்கள் இருப்பதால் அவரது மனைவி காவேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், தனது மனைவியை சந்தேகித்து அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
“கடந்த வெள்ளிக்கிழமை மாலை, சுரேஷ் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. தனது மனைவியை பெல்ட்டால் தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றார். உடனே, அவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், கோபமடைந்த சுரேஷ், தனது ஒரு வயதை மகளை வயலுக்கு அழைத்துச் சென்று, ஒரு குழி தோண்டி, உயிருடன் புதைத்தார். அவரது மனைவி திரும்பி வந்ததும், குழந்தை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் தனது குழந்தையை வயல்வெளியில் புதைத்தது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் மீது, தனது மகளை புதைத்ததற்காகவும், மனைவியைத் தாக்கியதற்காகவும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி பச்சன் சிங் கூறுகையில், “இது மிகவும் கொடூரமான குற்றம். குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது குழந்தையை கொன்றது மட்டுமல்லாமல், தனது மனைவியையும் கொலை செய்ய முயன்றார். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என்று கூறினார்.
பெற்ற மகளையே தந்தை உயிருடன் குழியில் புதைத்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்