திருப்பூரில் அரங்கேறிய மதுரை சம்பவம்... பழிக்குப் பழியாக 5வது கொலை: ’சுப்ரமணியபுரம்’ பாணியில் ஸ்கெட்ச்!
விக்னேஷ் கொலையாவதற்கு அவரது நண்பர் எதிரிக் கும்பலிடம் அவரைக் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் திருமலை பாளையம் அருகே புதன்கிழமை நள்ளிரவில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரதை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ் இவர் தாராபுரம் அருகே உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் ஒன்றில் உள்ள காலி மனை இடத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலங்கியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் விக்னேஷ் எதற்கு மதுரையிலிருந்து திருமலை பகுதிக்கு வந்தார் எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்தும். சம்பவ இடத்தில் கிடந்த கத்தி, வீச்சுவாள் . வாகனங்கள் பழுது பார்க்கும் சிறிய ராடு கம்பி ஆகிய தடயங்களை கைப்பற்றி எடுத்து வைத்துள்ளனர் மேலும் திருப்பூரிலிருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொலையாளி விட்டு சென்ற தடயங்கள் உள்ளனவா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்னேஷின் உடலை போலீசார் கைப்பற்றி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை வைத்தும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பழிக்குபழியாக நடந்த ஐந்தாவது கொலை எனச் சொல்லப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த விமல், மனோஜ், செல்வன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் இந்தக் கொலை தொடர்பாக மேலதிகமாக இருவர் சரணடைந்த நிலையில் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விசாரணை குறித்து போலீசார் கூறுகையில்,’விக்னேஷின் அண்ணன் சேர்மராஜ் மற்றும் முத்து காமாட்சி. விக்னேஷ் தரப்புக்கும் சங்கர் என்பவர் தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதில் 2018ல் சங்கர் தரப்பைச் சேர்ந்த சுகன் என்பவரின் கைகால்களை சங்கர் தரப்பினர் வெட்டினார்கள்.
இதற்கு பழிவாங்க, சங்கர் தரப்பினர் விக்னேஷின் அண்ணன் முத்து காமாட்சியை அதே ஆண்டு மே மாதம் கொலை செய்தனர். இதற்கு பதிலடியாக சங்கரை விக்னேஷ் தரப்பினர் செப்டம்பர் மாதம் கொலை செய்துள்ளனர். சங்கர் தரப்பினர் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் விக்னேஷ் தரப்பை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். இதில் முத்து காமாட்சி கொலையில் கைதான அதிமுகவைச் சேர்ந்த சண்முக ராஜாவை விக்னேஷ் தரப்பினர் வெட்டிக் கொன்றனர். இதற்கிடையே விக்னேஷுக்கு மதுரையில் வேறொரு கும்பலுண்ட முன் விரோதம் இருந்துள்ளது. அவர்கள்தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விக்னேஷை கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது’ எனத் தெரிவித்தனர் விக்னேஷ் கொலையாவதற்கு அவரது நண்பர் எதிரிக் கும்பலிடம் அவரைக் காட்டிக்கொடுத்ததுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
சுப்ரமணியபுரம் திரைப்படக் கிளைமாக்ஸ் பாணியில் அரங்கேறியுள்ள இந்த தொடர் கொலையால் தாராபுரம் மக்கள் திகிலடைந்துள்ளனர்.