Crime: நிலத்தகராறு பிரச்சினை.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை.. பெரும் பதற்றம்..
உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் உள்ள பதேபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் யாதவ் . இவர் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ஆக இருந்தவர். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரகாஷ் துபே என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. அப்படியான பிரச்சினை நேற்று காலையும் நீண்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு சத்ய பிரகாஷ் துபே வீட்டுக்கு பிரேம் யாதவ் சென்றுள்ளார். முதலில் சமாதான பேச்சு ஆரம்பித்த நிலையில் அது ஒரு கட்டத்தில் வாக்குவதமாக முற்றியது.
இருவரையும் சமாதானம் செய்ய சத்ய பிரகாஷ் துபே குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் தகராறு முற்றவே, பிரேம் யாதவை சத்ய பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக கொலை பற்றி அறிந்தவுடன் பிரேம் யாதவ் ஆதரவாளர்களான பதேபூர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேராக சத்ய பிரகாஷ் துபே வீட்டுக்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். நேராக அவர் மீதும், குடும்பத்தினர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சத்ய பிரகாஷ் துபே, அவரது மனைவி கிரண் துபே, மகள்கள் சலோனி, நந்தினி, மகன் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மகன் அன்மோல் படுகாயங்களுடன் கோரக்பூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து பதேபூர் கிராமத்தில் நடைபெற்ற 6 பேர் படுகொலையால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாவட்ட ஆட்சியர் அகண்ட் பிரதாப் சிங், போலீஸ் சூப்பிரண்டு சங்கல்ப் சர்மா ஆகியோர் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதுவரை கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.