கிருஷ்ணகிரி: பிரபல ரவுடி கொம்பன் கொலை வழக்கில் 2 பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண்
’’ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் மகேஷ் குமார் மற்றும் சிவா ஆகியோர் இருவரும் சரண்’’
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உள்ள அஞ்செட்டி தாலுகா தக்கட்டியை சேர்ந்தவர் நரசப்பா என்பவரின் மகன் மகன் சுரேஷ் என்கிற கெம்பன் (33). பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்கு மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. மேலும் தேன்கனிக்கோட்டை உட்கோட்ட ரவுடிகள் பட்டியலிலும் கொம்பனின் பெயர் இடம்பெற்றுள்ளது. கொம்பனும் அதே பகுதியை சேர்ந்த மற்றோரு ரவுடியான மகேஷ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.
கடந்த 21ஆம் தேதி இரவு மாரசந்திரம் கிராமத்தில் நடந்த சீட்டு ஏலத்தின்போது கொம்பனுக்கும் மகேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜ்குமார் (31), லோகேஷ், பிரவீன், கெஞ்சா உள்ளிட்டோர் கொம்பனை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கொம்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பித்து சென்று விட்டனர்.
போக்குவரத்து ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் 16 மணி நேரத்திற்கு பிறகு சிக்கியது
இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கிருத்திகா, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட கொம்பனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மகேஷ், ராஜ்குமார், லோகேஷ், பிரவீன், கெஞ்சா உள்ளிட்டவர்களை தேடி வருகிறார்கள். இந்த கொலை காரணமாக மாரசந்திரம் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஓசூர் விரைவு நீதிமன்றத்தில் மகேஷ் குமார் மற்றும் சிவா ஆகியோர் இருவரும் சரண் அடைந்தனர். இருவரையும் தேன்கணிக்கோட்டை காவல்துறையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம் - அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படை விரைவு