வரதட்சணை கொடுமையால் ஷார்ஜாவில் கேரளப் பெண் தற்கொலை: அதிர்ச்சி தரும் காரணம்
வரதட்சணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020-ல் திருமணமாகி கணவர் நிதிஷுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 8 ஆம் தேதியில் ஷார்ஜாவில் வசித்து வந்த விபன்சிகாவும் அவரது மகளும் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பணிப்பெண் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் வரதட்சணையின் காரணமாகவே விபன்சிகா தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
விபன்சிகா தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாளிலேயே அவரது முகநூல் பக்கத்தில் தற்கொலைக் குறிப்பு வெளிவருமாறு பதிவிட்டுச் சென்றுள்ளார். அதில், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரின் வீட்டில் இருந்து 6 பக்கங்கள்கொண்ட, மலையாளத்தில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்புக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது. விபன்சிகாவின் மகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மகளின் முகத்தில் தலையணையை அழுத்தி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, விபன்சிகாவின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல கொடூரமான கொடுமை தகவல்களும் கிடைத்தன.
விபன்சிகாவிடம் வரதட்சணை கேட்டு, அவரது கணவர் நிதிஷ், நிதிஷின் தந்தை மோகனன், சகோதரி நீது விபன்சிகாவை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக விபன்சிகா பெற்றோர் தெரிவித்தனர். கொடுமையின் காரணமாக தனது மகளுடன் விபன்சிகா தனியாக வசித்து வந்துள்ளார். விபன்சிகா, வெளுப்பான நிறத்துடன் இருந்த நிலையில், நிதிஷும் அவரது குடும்பத்தினரும் நிறம் குறைவாகவே இருந்துள்ளனர். இதனால், விபன்சிகா அழகாக இருக்கக் கூடாது என எண்ணி, விபன்சிகாவின் தலையை மொட்டையடிக்கவும் முற்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, பல பெண்களுடன் நிதிஷுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த விபன்சிகாவை உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தனியாக வசித்து வந்த விபன்சிகாவிடம் விவாகரத்துகோரி நிதிஷ் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில்தான், விபன்சிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















