இடுகாட்டுக்கு கடத்திச்சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 50 வயது கொடூரன் கைது
சிறுமி ஒருவரை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்துகொண்டே வருகிறது. சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வகை பெண்களுக்கும் அங்காங்கே பாலியல் சீண்டல்கள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரிட்டனின் கெண்ட் பகுதியில் அமைந்துள்ள மெயிட்ஸ்டோன் நகரில் இருக்கும் ஒரு இடத்திற்கு சிறுமி ஒருவர் தனக்கு தெரிந்த 50 வயது நபருடன் சென்றுள்ளார். அங்கு இடுகாட்டில் அழைத்துச்சென்று அச்சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு அந்த சிறுமி அளித்த புகாரின் பெயரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.இந்த புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில், “சிறுமி ஒருவர் எங்களிடம் அளித்த புகாரின் பெயரில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில் பெண் ஒருவர் அந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த சாலையில் நடந்து சென்றது தெரியவந்தது. அதன்பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். அவரும் அந்த சத்தத்தை கேட்டதாக கூறினார்.
இதையடுத்து 50 வயது மதிக்கதக்க அந்த நபரை நாங்கள் கைது செய்தோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். அவர் தற்போதைக்கு ஜாமீனில் வெளியே சென்றுள்ளார். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உறுதியான ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த விசாரணையில் அவருக்கு உரிய தண்டனையை பெற்று தருவோம். பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வரும் ஜனவரி 23-ஆம் தேதி வரை தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஒரு சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மற்றொரு பகுதியில் நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்தில் 21 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரை 50 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். எனினும் அப்போது அந்தப் பெண் சுதாரித்து கொண்டு தப்பியுள்ளார். அந்த சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்