"என்னை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தாருங்கள்” - கரூரில் கதறிய மாற்றுத்திறனாளி
திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் அவர் கேட்கும் பொழுதெல்லாம் பணம் அனுப்பி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளலாம் என்று இளைஞர் கேட்ட போது அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
கரூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 18 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, தன் மீது கொலை மிரட்டல் விடுவதாக மாற்றுத் திறனாளி இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த மந்திரகேவன்பட்டியை சேர்ந்தவர் வைரசாமி (வயது 31). தனியார் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றியபோது தன்னுடன் பணியாற்றிய சுகப்பிரியா என்பவரிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்கள் நட்பாக பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் அவர் கேட்கும் பொழுதெல்லாம் பணம் அனுப்பி வந்ததாகவும் மேலும், அவருக்கு தேவையான துணிமணிகளை வாங்கியும் கொடுத்ததாகவும் இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமணம் செய்து கொள்ளலாம் என்று இளைஞர் கேட்ட போது அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தொடர்ந்து இளைஞரிடம் பணம் பறிக்கும் நோக்கோடு தொலைபேசியில் அழைத்து வருவதாகவும், பலமுறை அவரது அழைப்புகளை ஏற்காமல் இருந்த பொழுதும், தொடர்ந்து தொலைபேசி மூலமாக அழைத்துக் கொண்டே இருப்பதாகவும், பேசும் பொழுது பணம் கேட்டு தரவில்லை என்றால் அருவருக்கத்தக்க வகையில், ஆபாசமாக, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபொழுது அந்த பெண் அவரது உறவினர்கள், ஆண் நண்பர்களிடம் கூறி தன்னை தாக்கவும் முற்படுகிறார்கள் என்றும், தனக்கு மிகுந்த பயமாகவும் இருக்கிறது. அந்த பெண்ணிடம் கொடுத்த 18,000 ரூபாய் பணத்தை மீட்டுத்தரும்படி மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.