தீபாவளிக்கு கோயிலுக்கு சென்ற குடும்பம்.. வீட்டை மொட்டை அடித்த கொள்ளையர்கள் - நடந்தது என்ன ?
Kanchipuram News: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயிலுக்கு சென்றவர் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும் விடுமுறையை அறிவித்துள்ளது. எப்போதும் தீபாவளி பண்டிகை என்பது மக்கள் மனதில் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய பண்டிகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தொடர் விடுமுறை வந்ததால் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிறகு பல கோயில்கள், சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நபருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது .
காத்து இருந்த அதிர்ச்சி
காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர், மனைவி ராதா, மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்றுள்ளார்.
இந்தநிலையில் குடும்பத்தினருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 25 சவரன் நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் 250 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
போலீசார் தீவிர விசாரணை
கொள்ளை சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த தாஸ் பிரகாஷ் காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி தாலுகா போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரங்களை சேகரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மற்றும் ஆய்வுகளுக்கு மேற்கொண்டனர். கொள்ளையர்களின் கைரேகை உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சாமி தரிசனத்திற்காக வெளியூர் சென்று இருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் வீட்டின், கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் விசாரித்த போது: திட்டமிட்டு மர்ம கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்திக் கொண்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. முக்கிய தடையங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.