காஞ்சிபுரத்தை நடுங்க வைத்த கொலை.. அலைந்து திரிந்த மோப்பநாய்.. ஓடி வந்த எஸ்.பி.,
Kanchipuram: குளத்தில் தலையில் வெட்டு காயங்களுடன், இடுப்பில் கல் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள சின்ன குளத்தில், தலை மட்டும் வெளியில் தெரிந்தவாறு, சடலம் ஒன்று மிதப்பது போன்று இருந்ததாக அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் பாலுச்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, பாலுச்செட்டி சத்திரம் குளத்தில் இறங்கி பார்த்த போது, 35 வயது மதிக்கத்தக்க உடல் உப்பி அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தது.
காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை
தலையில் வெட்டு காயங்களுடனும், இடுப்பில் சிமெண்ட்-ஆல் செய்யப்படும் ஹாலோ பிளாக் கல் கொண்டு கட்டப்பட்டு மிதந்து வந்ததும் உடல் சிதைந்து அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் பொறுப்பு எஸ்.பி-யும், செங்கல்பட்டு எஸ்.பி-யுமான சாய் பிரணீத் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அலைந்து திரிந்த மோப்ப நாய்
மேலும் சடலம் யார் என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்திடவும் உத்திரவிட்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்படு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் உடல் அழுகிய நிலையில் இருந்ததன் காரணமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில் எவ்வித பயனும் கிட்டாமல் போனது. மோப்பநாய் ஒரு சில இடங்களில் அலைந்து திரிந்து எதையும் கண்டுபிடிக்காமல், மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
தனிப்படை அமைத்து விசாரணை
இதனையெடுத்து சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பிரிசோதனைக்காக அழுகிய நிலையில், உடலை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சடலமாக மீட்கப்பட்டவர், வெட்டு காயங்களும், இடுப்பில் கல் கட்டப்பட்ட நிலையில் இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்கிற சந்தேகத்துடன் பல்வேறு கோணங்களில் இச்சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
திடுக்கிடும் உண்மைகள்
காஞ்சிபுரம் காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த காத்தவராயன் மகன் முனுசாமி (30) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் முனுசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் புதன்கிழமை இரவு மது போதையில் வந்த முனுசாமி தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட முனுசாமியின் தந்தை காத்தவராயன் அருகில் இருந்த ரீப்பர் கட்டையால் முனுசாமியை அடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உதவிய மருமகன்
மேலும் சம்பவம் குறித்து புதுப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தனது மருமகனான ராஜேஷ்க்கு (42) தகவல் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து உயிரிழந்த முனுசாமியின் உடலை கல்லால் கட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டு காத்தவராயன் (65) ராஜேஷ் (42) ஆகிய இருவரையும் கைது செய்த பாலு செட்டி சத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை மகனை கொலை செய்துவிட்டு மருமகனுடன் சேர்ந்து கொண்டு, கொலையை மறைக்க நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.