தஞ்சையில் 5 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
’’பெங்களூர் மாநிலத்தில் வேலை செய்யும் போது, ஒரு பெண்ணையும், மதுரையில் வேலை செய்யும் ஒரு பெண்ணையும், கும்பகோணம் மற்றும் மற்றொரு ஊர்களில் தலா 3 பெண்கள் என 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்’’
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, நாச்சியார்கோயிலை அடுத்த வண்டுவாஞ்சேரியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் கும்பகோணம் பஸ் நிலையம் அருகிலுள்ள மல்டி மார்க்கெட்டிங் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் அச்சிறுமி காணாமல் போனதால், சிறுமியின் பெற்றோர்கள், நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். சிறுமி காணாமல்போனதை அடுத்து, போலீசார், அக்கடைக்கு சென்று விசாரித்த போது, கடையில் வேலை பார்த்து வந்த மதுரை, மேலவீதி, சிங்காரபுரம், மெகபூபாளையத்தை சேர்ந்தவர் சர்பூதீன் மகன் சையத்அலி(40) என்பவரும் காணாமல் போனது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில், கடைக்கு வந்த சிறுமியை, சையத்அலி,பைக்கில் அழைத்து சென்றதாக தெரிய வந்தது. தொடர்ந்து அச்சிறுமியின் வீட்டில் விசாரணை செய்த போது, சிறுமி, சிம் கார்டை மட்டும் செல் போனிலிருந்து எடுத்து கொண்டு, செல்போனை வீட்டில் வைத்து சென்றது தெரியவந்தது. பின்னர், போலீசார், சையத் அலியின் செல்போனை கண்காணித்த போது, திருப்பூரில் ஸ்விட்ச் ஆஃப் செய்தது தெரிய வந்தது. போலீசார் திருப்பூருக்கு சென்று விசாரித்த போது, சையத்அலி, செல்போனை அங்குள்ள செல்போன் கடையில், தான் கோயம்புத்துாரிலிருந்து வருவதாகவும், பஸ்சுக்கு பணம் இல்லாததால், செல்போனை விற்பனை செய்வதாக கூறி, விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனிடையில் கடந்த 5 மாதகாலமாக தேடி வந்த நிலையில், சையத்அலி, வங்கி மற்றும், ஏடிஎம் மூலம் பணம் எடுத்து பரிவர்த்தனை செய்து வந்தது, போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், ரகசியமாக விசாரணை செய்த போது, கேரளா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார், கேரளா மாநிலத்திற்கு அவர்கள் இருவரையும் பிடிக்க சென்ற போது, சையத்அலி, போலீசார் வருவதையறிந்து, கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயிலுக்கு வந்தார்,
இதனையறிந்த போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சையத்அலியை பிடித்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், போலீசார் விசாரணையில், சையத்அலி, பெங்களூர் மாநிலத்தில் வேலை செய்யும் போது, ஒரு பெண்ணையும், மதுரையில் வேலை செய்யும் ஒரு பெண்ணையும், கும்பகோணம் மற்றும் மற்றொரு ஊர்களில் தலா 3 பெண்கள் என 5 பெண்ணை திருமணம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சையத்அலி 5 இளம் பெண் மற்றும் சிறுமியை திருமணம் செய்து கொண்டது நகை பணத்திற்காகவும் அல்லது வேறு காரணமாக இருக்குமா என போலீசார், சையத்அலியை பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சையத்அலியிடமிருந்து, மீட்கப்பட்ட சிறுமியை, அறிவுரைகள் கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.