Crime: களக்காடு அருகே பேரம் பேசுவது போல் நடித்து யானை தந்தம் பதுக்கல் - 7 பேரை சுற்றிவளைத்த வனத்துறை
பல லட்ச மதிப்புள்ள யானை தந்தத்தை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து கையும், களவுமாக மாட்டிக்கொண்டு 7 பேர் தற்போது சிறையில் கம்பி எண்ணும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதுக்கி வைக்கப்பட்ட யானை தந்தம்:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் மற்றும் திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோகேஸ்வரன் களக்காடு பிரிவு வனவர் ஸ்டாலின் ஜெபக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சுமார் 30 வன காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு அருகே ஊச்சிகுளம் என்னும் கிராமத்தில் ஒருவரது வீட்டில் யானை தந்தம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து களக்காடு வனச்சரக துணை இயக்குனர் தலைமையில் அந்த வீட்டை சுற்றி சோதனை செய்ததில் தங்கத்துரை என்பவரது வீட்டில் யானை தந்தத்தை சிலர் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பேரம் பேசுவது போல் சுற்றி வளைத்த வனத்துறையினர்:
அங்கு சென்ற தனிப்படையினர் யானை தந்தத்தை வாங்க சென்றது போல நடித்து அவர்களிடம் பேரம் பேசி உள்ளார். அதனை உண்மை என நம்பிய தங்கத்துரை அவரை வீட்டிற்குள் அழைத்து செல்ல உடன் சென்ற மற்ற வனத்துறை தனிப்படையினர் தங்கத்துரை உட்பட அங்கிருந்த 7 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து பிடிபட்ட 7 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள் சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற ராயப்பன்(27), சிதம்பரபுரம் மேலரதவீதியை சேர்ந்த கண்ணன்(44), சரவாணக்குமார்(43), கீழரதவீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(35), சென்னையைச் சேர்ந்த முருகன்(43), திருவள்ளூரை சேர்ந்த நாகராஜ்(54) என தெரிய வந்தது.
யானை தந்தம் பறிமுதல்:
இதில் முத்துகிருஷ்ணன் என்பவர் தன்னிடம் யானை தந்தம் உள்ளதாகவும் அதனை விற்பனை செய்ய உதவினால் பல லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதின் பேரில் மற்ற 6 பேரும் அவருக்கு உதவியாக செயல்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து பதுக்கி வைக்கப்பட்ட 2.8 கிலோ எடையுள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த யானை தந்தம் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது? இதேபோன்று வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் இவர்கள் ஈடுபட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து கைது செய்த 7 பேரையும் நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த யானை தந்தம் கடத்தல் தொடர்பாக மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாக துணை இயக்குனர் தெரிவித்தார். பல லட்ச மதிப்புள்ள யானை தந்தத்தை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்து கையும், களவுமாக மாட்டிக்கொண்டு 7 பேர் தற்போது சிறையில் கம்பி எண்ணும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.