விழுப்புரம் அருகே தீண்டாமை: பட்டியலின மக்களை ஊர் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்து கொடுமை!
சாதி மோதல் நடக்க வாய்ப்புள்ளதால் , திருவெண்ணைநல்லூர் காவல் துறையினர் இருபிரவ்னிரும் அழைத்து விசாரணை செய்து வருகின்றனர் .
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் 50 பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினரும் , 200 வேறொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர் .
அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென முருகன் கோவில் ஒன்றை தங்கள் பகுதியில் கட்டி வழிபடு செய்து வருகின்றனர் .இதே போல் தலித் சமூகத்தினரும் , தங்களுக்கென்று ஒரு மாரியம்மன் கோவிலை கட்டி கடந்த 50 வருடங்களாக வழிபாட்டு வருகின்றனர் .
ஆண்டுதோறும் தாங்கள் விமர்சியாக கொண்டாடப்படும் , மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு , கொரோனா தோற்று காரணமாக இந்தாண்டு காவல் துறையினர் தடை விதித்து இருந்ததால், மே 9 ம் தேதி எளிமையான முறையில் திருவிழாவை நடத்தி முடித்தனர்.
அதை தொடர்ந்து தாங்கள் ஆண்டு தோறும் நடத்தும் கலை நிகழ்ச்சிக்கு, எந்தவித அனுமதியும் பெறாமல் , மைக் செட் , ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கியை பயன்படுத்தி , மே 13 ம் தேதி மிக விமர்சியாக கொண்டாடினர். இதை அறிந்த ஒரு தரப்பை சேர்ந்தவர் , கலை நிகழ்ச்சி கொண்டாட்டத்தினால் கொரோனா பரவல் அபாயம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . தகவலின் பேரில் அங்கு வந்த திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய போலீசார் , கலைநிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தி அவர்கள் பயன்படுத்திய மைக் செட் மற்றும் ஸ்பீக்கர்களை பறிமுதல் செய்து சென்றனர் .
அடுத்த நாள் 13 ம் தேதி , பட்டியலின தரப்பு நாட்டாமைக்காரர்கள் , காவல் நிலையம் சென்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து , ஸ்பீக்கர் உள்ளிட்ட ஒலிபெருக்கியை , காவல் நிலையத்தில் இருந்து மீட்டு எடுத்து கொண்டு ஊர் திரும்பி சென்றுகொண்டு இருக்கும் பொழுது, எதிர் தரப்பினர் அவர்களை வழி மறித்து ஊர் பஞ்சாயத்தில் பட்டியலின குடும்பத்தினர் கலந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளனர். அதன் பின் சென்ற பட்டியலின குடியிருப்பை சேர்ந்தவர்களை காலில் பஞ்சாயத்தார் முன் கீழே விழச் செய்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பட்டியல் இனத்தை சேர்ந்த குமரன் என்ற இளைஞர் பேசுகையில், ‛‛அவர்கள் கூறிய படி பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஊர் தரப்பினர் கூடி பஞ்சாயத்தில் கலந்து கொண்டோம் . அவர்களை மீறி நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் , அதற்கு பிராயச்சித்தமாக , எங்கள் பகுதியை சார்ந்த பெரியவர்கள் பஞ்சாயத்தார் காலில் விழவேண்டும் என்று, தீர்ப்பு வழங்கினர்.
சாதி சண்டை ஏற்படக்கூடாது என்று எங்கள் பகுதி நாட்டாமைக்காரர்களான சந்தானம் 65 , திருமால் 68 மற்றும் ஆறுமுகம் 60 ஆகிய மூவரும் , ஊர் பஞ்சாயத்தில் சாசங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்டனர். இருந்தும் அதை ஏற்காத அந்த தரப்பினர், எங்கள் அனைவரையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அச்சுறுத்தினர் . இளைஞர்கள் சேர்ந்து காலில் எல்லாம் விழ முடியாது என்று தெரிவித்ததும் , எங்கள் சாதி பெயரை சொல்லி திட்டி , காலில் விழவில்லை என்றல் அனைவரது கழுத்தையும் வெட்டி வீசிவிடுவோம் என்று அச்சறுத்தினர். அதை நாங்கள் பொருட்படுத்தாமல் நின்றதால், எங்கள் தரப்பை சேர்ந்த முருகன் என்பவரை பயங்கரமாக தாக்கினர். பதட்டமான எங்கள் பெரியவர்கள், அவர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு எங்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதனிடையே அந்த தரப்பினர் எங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராவதாக செய்தி அறிந்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செலுத்த வந்து இருக்கிறோம் . என்று கூறினார் .
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் விழுப்புரம் எஸ் பி ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பேசிய எஸ் பி ராதாகிருஷ்ணன், ‛‛பெரிய அளவில் கலவரம் நடக்க வில்லை என்றாலும் , சாதி மோதலை தவிர்க்கும் பொருட்டு இருதரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்து உள்ளோம் , இருதரப்பிலிருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளது. திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சாதி மோதல் நடக்காமல் தடுப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு ஒட்டனந்தல் கிராமத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார் .
பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக முதியவர்களை காலில் விழ வைத்த சம்பவம், தற்போது பரபரப்பான பேசும் பொருளாக மாறியுள்ளது.