Crime : லண்டனில் இந்திய வம்சாவளி மாணவி படுகொலை.. காதலர் கைது.. நடந்தது என்ன?
அதிகாலை 3 மணியளவில் மாணவி தங்கியிருந்த மாடியில் பலத்த சத்தம் கேட்டதாக அங்கு தங்கியிருந்த சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லண்டனின் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதலாம் ஆண்டு படித்து வந்த சபிதா தன்வானி என்னும் இந்திய வம்சாவளி மாணவி க்ளர்கென்வல் பகுதியில் உள்ள ஆர்பர் ஹவுஸ் என்னும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். 19 வயதாகும் சபிதா கடந்த சனிக்கிழமையன்று விடுதியில் தனது அறையில் இறந்த நிலையில் கிடப்பதை கண்ட மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே , சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் மாநகர காவல்துறை , அவரின் உடலை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணையின்போது சபிதாவின் கழுத்து பகுதியில் பலத்த காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபிதாவின் ஆண் நண்பர் உட்பட நெருக்கமாக பழகியவர்கள் அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 180 மாணவர்கள் தங்கியிருக்கும் 6 அடுக்கு மாடி ஆர்பர் ஹவுஸ் விடுதி கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி சபிதா 5வது மாடியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் மாணவி தங்கியிருந்த மாடியில் பலத்த சத்தம் கேட்டதாக அங்கு தங்கியிருந்த சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முடிவில் சபிதாவின் ஆண் நண்பர் மஹேர் மரூஃப் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 22 வயதாகிறது. மேலும் மஹேர் துனிசியா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலிஸ் விசாரணையின் அடிப்படையில் மஹரும் சபிதாவும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். ஆனால் மஹர் மாணவர் கிடையாது. சபிதா உயிரிழப்பதற்கு முதல் நாள் அதாவது வெள்ளிக்கிழமை வரை அவர் சபிதாவுடன்தான் தங்கியிருந்தார் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. தான் ஆசை காதலியை மஹர் ஏன் கொலை செய்தார் என்ற கோணத்தில் போலிசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். மஹர்தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது தீவிர சட்ட நடவடிக்கைகள் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபிதா கொலை சம்பவம் குறித்து சபிதாவின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. படிக்க சென்ற தங்கள் மகள் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பது , அவர்களது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர் ” இப்படியான இக்கட்டான சூழலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் “ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவை சேர்ந்த பலரும் மாணவிக்கு ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்