IND vs NZ: நாளை அரையிறுதி! ஒரு டிக்கெட்டை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயற்சித்த இளைஞர் கைது
இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கான ஒரு டிக்கெட்டை 1 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்தியா - நியூசிலாந்து:
இந்த சூழலில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் முதலாவது அரையிறுதி போட்டியில் நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோத உள்ளது. இந்த போட்டியை காண இந்திய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் போட்டியை நேரில் காண ஆவலுடன் உள்ளனர்.
அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அரையிறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பது தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கான போட்டியை நேரில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இதைப் பயன்படுத்தி பலரும் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.
1 டிக்கெட் 1 லட்சம்:
இந்த சூழலில், மும்பையில் வசித்து வரும் ரோஷன் குருபக்ஷனி என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்தியா – நியூசிலாந்து போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்க முயற்சித்துள்ளார். ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் என்று கூறியுள்ளார். மேலும், தன்னிடம் 2 டிக்கெட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு போலீசார் மும்பையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளனர்.
மேலும், சூதாட்டம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வரும் சூழலில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க முயன்ற ரோஷன் போலீசார் பிடியில் சிக்கினார். அவரிடம் இருந்து போலீசார் 2 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுபோன்று அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பது தவறு என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். ரோஷண் போல அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்கும் நபர்களையும் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் தீவிர கண்காணிப்பு
கிரிக்கெட் போட்டிகளுக்கான சூதாட்டத்தின் தலைநகரமாக மும்பை மாநகரம் விளங்குவதாக பல்வேறு தகவல்கள் கடந்த பல ஆண்டுகளாக உலா வருகிறது. இதனால், வான்கடேவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்காக சூதாட்டங்கள் நடைபெறுவதை தடுக்கவும் மும்பை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தலை கிறுகிறுக்கும் சம்பவம்.. 3 கிலோ போதைப்பொருள்.. ரூ.25 கோடி.. அதிகாரிகளை அலறவைத்த பயணி..
மேலும் படிக்க: Crime: அடித்து இழுத்து செல்லப்பட்ட பெண்...கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...உ.பியில் ஷாக்!