Crime : அரூர் : காதல் விவகாரத்தில், இளைஞரின் தாயை கடத்திச் சென்று கொடூரம்..
அரூர் அருகே காதல் விவகாரத்தில், இளைஞரின் தாயை, கடத்திச்சென்று வனப்பகுதியில் அரை நிர்வாணப்படுத்தி, மது குடிக்க வற்புறுத்தி கொடுமை
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வன் மகன் சுரேந்தர், (24) கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கீழ்மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி மகள் பவித்ரா, (23) பட்டப்படிப்பு முடித்துவிட்டு கோச்சிங் கிளாஸ் சென்று படித்து வருகிறார்.
சுரேந்தர் (எஸ்சி-குறவன்) மற்றும் பவித்ரா(கொங்கு வேளாளர்) இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ஆனால் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் காதல் விவகாரம் தனது மகன் சுரேந்தரனிடம் பேசியுள்ளார். அப்போது சமூக வேறு, இது நமக்கு சரியாக இருக்காது என கண்டித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று மாலை சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர், காலை முதல் வீட்டிற்கு வரவில்லை.
ஆனால் சுரேந்தர் காதலித்த பவித்ராவும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் பவித்ராவின் தந்தை, சுரேந்தர் தான் தனது மகள் பவித்ராவை அழைத்து சென்றிருப்பான் என்ற கோபத்தில், தனது உறவினர்களுடன், சுரேந்தர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும் அவரது தாய் முருகம்மாள் வீட்டில் இருக்கும்போது செல்வத்தை ”எங்கே உனது மகன் எனது மகளோடு அனுப்பி வைத்து விட்டாயா” என்று சொல்லி, அடித்து சட்டையை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த செல்வத்தின் மனைவி முருகம்மாள் தடுத்துள்ளார். அப்போது பெண் என்று கூட பார்க்காமல் முருகம்மாளை அடித்து, கணவன் கண்முன்னே புடவை இழுத்து, துன்புறுத்தியதாகவும், அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன் சுப்பிரமணி, ஓடி வந்து தடுத்தபோது, அவரையும் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்பு, சுரேந்திரன் தாய் முருகம்மாளை இருசக்கர வாகனத்தில் இழுத்து உட்கார வைத்து, அந்த கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியில் முருகம்மாளை அழைத்துச் சென்றுள்ளனர். ஆங்காங்கே கால்நடைகள் மேய்ப்பவர்கள் இருந்ததால், வனப் பகுதியில் ஒருநாள் முழுவதும் அழைத்துச் சென்றுள்ளனர். இதனை அ டுத்து ஓரிடத்தில் அமர வைத்து அடித்து மகன் இருக்கும் இடத்தை சொல்லு என துன்புறுத்தியுள்ளனர். மேலும் அரை நிர்வாணப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்விடுவதாகவும், கத்திய காட்டி குத்துவதாகவும் மிரட்டி உள்ளனர்.
மேலும் குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், ஆஸ்துமா நோயாளிய முருகம்மாளை, தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் மயக்கம் அடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தீ மூட்டி எல்லோரும் மது அருந்துகொண்டு, முருகம்மாவை மதுவை குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும் தன் ”மகன் இருக்கிற இடம் தெரியாது.. தன்னை விட்டு விடுங்கள்” என முருகம்மாள் அவர்களிடம் மன்றாடியுள்ளார்.
ஆனாலும் விடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்த தகவல் இந்த கும்பலுக்கு தெரியவந்துள்ளது. மேலும் வெளியில் இருந்து அடிக்கடி இவர்களுக்கு செல்போன்களின் தகவல் கிடைத்த வண்ணம் இருந்துள்ளது.
இதனால் காவல் துறை வரைக்கும் சென்றதால், நள்ளிரவு முருகம்மாவை வனப் பகுதியில் இருந்து, பெண்ணின் தந்தை பூபதியும் மற்றொருவரும் அழைத்து வந்து, மொரப்பூர் சாலையில் விட்டுள்ளனர்.
மேலும் இங்கு நடந்ததை வெளியில் காவல்துறையிடம் தெரிவித்தால், வீட்டில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவோம். உன் மகன் எங்கு இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் அந்தப் பெண்ணையும் உன் மகனையும் கொலை செய்து விடுவோம், உங்க வீட்டில் உள்ள எல்லோரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். தொடர்ந்து நள்ளிரவில் மொரப்பூர் சாலையில் வந்து நின்றவுடன் காவல் துறையினர் வந்து முருகம்மாவை அழைத்துச் சென்று, மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை அ டுத்து முருகம்மாவின் கணவர் செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரவு ஒரு மணிக்கு மேல் முருகம்மாளை குடும்பத்தினர் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அழைத்து வந்தவுள்ளனர்.
அப்பொழுது முருகம்மாளை இந்த கும்பல் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால்,காவல் துறையில் விசாரணையில் மாற்றி மாற்றி பேசி உள்ளார். மேலும் பெண்ணின் தந்தை பூபதி மற்றும் அவருடன் இருந்த 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு கிராமத்தைச் சார்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தி மிரட்டியதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மொரப்பூர் காவல் துறையினர் காதல் விவகாரத்தில் சுரேந்திரனின் தாய் முருகம்மாளை கடத்தி சென்று அரை நிர்வாணப்படுத்தி, மது குடிக்க சொல்லி வலியுறுத்தி கொடுமை செய்த சம்பவத்தில், பூபதி, கார்த்திக், பூபதி மனைவி செல்வி, சரவணன், மாயன், வேலு, கலையரசன் உள்ளிட்ட 20 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஊருக்குள்ளே இருக்கிறார்கள். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.