வீட்டை விட்டு வெளியேறிய மாமனார்! மனைவியை அடித்தே கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் கைது..!
சென்னை, தண்டையார்பேட்டையில் மனைவியை அடித்தே கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது செல்வவிநாயகர் கோவில் தெரு. இந்த தெருவில் வசித்து வருபவர் ஹரி. 27 வயதான இவர் அருகில் உள்ள கார் ஷோ ரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா. இந்த நிலையில், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது மனைவி ஜீவிதாவை ஹரி அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கொண்டு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தகவலறிந்த ஜீவிதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், ஜீவிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹரி கூறினார். ஆனால், பிரேத பரிசோதனையின் முடிவில் ஜீவிதா பலமாக தாக்கப்பட்டிருப்பதும், அவரது மார்பு பகுதியில் பலத்த தாக்குதல் நடந்ததாலுமே அவர் உயிரிழந்தார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் கணவன் ஹரி தான் மனைவி ஜீவிதாவை அடித்தே கொலை செய்துள்ளார் என்பதும், கொலையில் இருந்து தப்பிப்பதற்காக தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. மேலும், ஹரிக்கும், ஜீவிதாவிற்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனால், இருவருக்கும் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், ஜீவிதாவின் தந்தை மகேந்திரனும் தனது மகளுடன் வந்து தங்கியுள்ளார். கடந்த ஒரு மாதமாக மகேந்திரன் ஜீவிதா மற்றும் ஹரியுடன் இணைந்து தங்கியுள்ளார். அப்போது, கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், மனமுடைந்த மகேந்திரன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தனது தந்தை மாயமானதற்கு காரணம் தனது கணவர்தான் என்று ஜீவிதாவிற்கும், ஹரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஹரி ஜீவிதாவை கடுமையாக தாக்கியுள்ளார். ஹரி தாக்கியதில் பலமாக காயமடைந்த ஜீவிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளி ஹரியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க : Actress MalavikaMohanan : கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ... மாலத்தீவில் மஜா செய்யும் மாளவிகா மோகனன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்