Crime: கல்லால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட ஊராட்சி தலைவர்... ஒசூர் அருகே பயங்கரம்..!
தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது (46) இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினராக இருந்தார். இவர் தற்போது தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் தளி பகுதியில் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது கிராமத்தின் அருகே அவர் வந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கட்டையால் சரமாரியாக அடித்தனர். இதனால் அந்த கும்பலிடம் இருந்து நரசிம்மமூர்த்தி தப்பித்து செல்ல முயன்றார்.
அதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் நரசிம்மமூர்த்தியை மடக்கி பிடித்து கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை காவல்நிலைத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கிருத்திகா, தளி ஆய்வாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் மற்றும் காவலர்கள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நரசிம்ம மூர்த்தியின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து தகவல் அறிந்ததும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் லகுமய்யா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுவரையில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வரையில் தெரியவில்லை. இந்த கொலை குறித்து தளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரும், ஊராட்சி தலைவருமான நரசிம்மமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளதால் தளி அருகே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எந்த வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் ஏராளமான காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

