Crime: பழைய இரும்பு குடோனில் 26 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு.. இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது!
வேறு ஒருவருக்கு இரும்பு குடோனை கொடுக்க வேண்டி பணம் பெற்று கொண்டு காலனி பிரபு தலைமையில் கட்டபஞ்சாயத்து நடந்ததும், அதனை தொடர்ந்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன் என்பவரின் மகன் முத்தையா (51). இவரது அண்ணன் முருகனுக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் உள்ளது. முத்தையா டிரைவராக அவரது அண்ணனின் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். சில சமயங்களில் முத்தையா இரும்பு குடோனில் உள்ள அறையில் பேச்சி முத்து என்பவர் உடன் சேர்ந்து தங்குவது வழக்கம். பிரபுவின் அண்ணன் குடோன் இடத்தின் உரிமையாளரிடம், இடத்தை வாங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுத்திருந்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும், முத்தையாவின் அண்ணன் இடத்தை கிரையம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்தையாவும் பேச்சி முத்துவும், குடோனை பூட்டிவிட்டு அங்கு தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குடோனின் கதவு பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து, திடுக்கிட்டு முத்தையா எழுந்துள்ளார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் முத்தையாவும் பேச்சிமுத்துவும் தங்கியிருந்த அறைக்குள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்து செல்போனை பறித்துள்ளனர். தொடர்ந்து முத்தையா மற்றும் பேச்சிமுத்து இருவரின், கை, கால்களை கட்டி அறைக்குள் அடைத்தனர். டிராக்டர் மற்றும் வேன்களில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஆறு டன் எடையுள்ள பழைய அலுமினியம், செம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றியுள்ளனர். மேலும் அலுவலகத்தில் இருந்த பீரோ டேபிள் பிரிட்ஜ் வாஷிங் மெஷின், எல்.இ.டி டிவி , சிசிடிவி கேமரா உள்ளிட்ட 26 இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதேசமயத்தில் அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த முத்தையா மற்றும் பேச்சிமுத்துவிடம் இடத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். நேற்று காலை குடோனுக்கு சென்ற முத்தையாவின் சகோதரர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து முத்தையா மற்றும் பேச்சிமுத்துவின் கட்டுக்களை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். இதுகுறித்து முத்தையா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் விசாரணையில் வேறு ஒருவருக்கு இரும்பு குடோனை கொடுக்க வேண்டி பணம் பெற்று கொண்டு இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு என்கிற காலனி பிரபு தலைமையில் கட்டபஞ்சாயத்து நடந்ததும், அதனை தொடர்ந்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது. பின்னர் குடோனுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து அவர்களை கட்டிப்போட்டு விட்டு பொருட்களை கொள்ளை அடித்து சென்றதாக சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு என்கிற காலனி பிரபு (36), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (30 ),திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மத் அலி, மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த வீரபாரதி (21), மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த பென்னி (19) மதுரை பைகாராவைச் சேர்ந்த மனோஜ் குமார் (19 ),மதுரை தோப்புக்காலனியை சேர்ந்த வீரய்யா என்கிற புலி (27 ), மதுரை கனகவேல் காலனி பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி( 16), மதுரை வசந்த் நகரை சேர்ந்த பிரபு என்கிற வெள்ளையன் (24), மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (24), ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த பாலமுருகன் (26 ), மதுரையை சேர்ந்த முகேஷ் (22 ), பார்த்தசாரதி (19 ) ஆகிய 13 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.