PUBG Madan | 'பப்ஜி மதனின் பாஃய்சன் பேச்சு.... அவரை ஏன் வெளியே விடணும்?' -கொதித்த நீதிபதிகள்.. தள்ளுபடியான மனு!
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பப்ஜி மதனின் பேச்சு நச்சுத்தன்மை கொண்டதாகவும், அவரை ஏன் வெளியில் விடவேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மனைவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இதில் பெறப்பட்ட பணம் மூலமாகதான் இருவரும் இந்த இரண்டு ஆடி ரக கார்களை வாங்கியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்திலும்,தங்களிடம் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு ஆடி ரக கார்களும் வேண்டும் என்று சைதாப்பேட்டை 11 வது நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்