Murder: 50 வயதான தந்தையுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்: கொலை செய்த மகனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தந்தையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை, படுகொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தந்தையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை, படுகொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலையத்தில், சிறப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன் (50). இவர் கடந்த, 2011-ஆம் ஆண்டு உத்திரமேரூரில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். அப்போது, உத்திரமேரூர் அடுத்த வேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, வெங்கடாசலபதியின் மகள் ரம்யா (20) என்பவருக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேல்முருகன் மாறுதலாகி ஒரகடம் காவல் நிலையத்திற்கு சென்றார். அதன்பின்பும், இவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு, வேல்முருகன் காஞ்சிபுரம் நாகலூத்து தெருவில் உள்ள, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ரம்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், ரம்யா கர்ப்பமடைந்தார். இத்தகவல் வேல்முருகனின் குடும்பத்திற்கு தெரிந்ததும் அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். 50 வயதில் தந்தை, வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தையை பெற்று எடுத்தால், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்த, வேல்முருகனின் மகன் ரஞ்சித்குமார் ரம்யாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
அதன்படி, ரம்யா வசித்து வந்த வீட்டிற்கு ரஞ்சித்குமார் சென்றுள்ளார். பின்னர், உன் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விட்டு, சொந்த ஊருக்கு சென்று விடு என ரம்யாவிடம் கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரம்யா, வேல்முருகனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த, ரஞ்சித்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரம்யாவை சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, சிவகாஞ்சி போலீசார் ரஞ்சித்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று இறுதி கட்ட விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, ரஞ்சித்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே, குற்றவாளி ரஞ்சித்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அபராதத்தை கட்ட தவறினால், கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.