Krishnagiri: கிருஷ்ணகிரி ஆணவக்கொலை; கொலையாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் - அனுசுயா குடும்பத்தினர் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் கோரிக்கை:
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை விவகாரத்தில் படுகாயமடைந்த அனுசுயா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும், இனி ஆணவக் கொலை எண்ணம் யாருக்கும் வராத வகையில் தண்டனை வழங்க வேண்டும் என அனுசுயாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காதல் திருமணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு அருகே அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த அனுசுயா என்பவர் உடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 27-ம் தேதி திருப்பூரில் உள்ள சுபாஷ் மற்றும் அனுசுயா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாட்டி வீட்டில் தஞ்சம்:
இதையடுத்து சுபாஷ் மனைவியுடன் தனது சொந்த ஊரான அருணபதிக்கு வந்துள்ளார். ஆனால் அவர்களை தண்டபாணி வீட்டில்சேர்க்க மறுத்துள்ளார். இதனால் அங்கு பெரும் வாக்குவாதமே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுமண தம்பதி செய்வதறியாமல் திகைத்து நின்றபோது சுபாஷின் பாட்டி கண்ணம்மா அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுத்தார். தன்னுடைய பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டு வந்த மகனுக்கு, தனது தாய் கண்ணம்மா அடைக்கலம் கொடுத்த செய்தி தண்டபாணிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இரட்டைக் கொலை:
தனது தாய் கண்ணம்மா வீட்டிற்கு அதிகாலையில் சென்ற தண்டபானி, தன் பேச்சை மீறி திருமணம் செய்துகொண்ட சுபாஷை வெளியே அனுப்பாமல் ஏன் அடைக்கலம் கொடுத்தாய் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷையும், கண்ணம்மாவையும் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த மருமகள் அனுசுயாவையும் அவர் சரமாரியாக வெட்டினார்.
இதில் சுபாஷும், கண்ணம்மாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். உடனே தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அனுசுயாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர், அனுசுயாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி கைது:
தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா எட்வின் சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஆணவக் கொலை செய்த தண்டபாணியை விரைவில் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவர்கள் தண்டபானியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இரட்டை ஆணவக்கொலை செய்து தலைமறைவாக இருந்த தண்டபாணியை அரூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, அனுசுயாவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.





















