Crime: பள்ளிக்கு செல்ல சொன்னதால் ஆத்திரம்.. தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற பயங்கரம்..
ஈரோடு அருகே பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9ம் வகுப்பு மாணவன் தன் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சுங்ககாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வன். இவர் சாலை மற்றும் கட்டடம்கட்டும் ஒப்பந்ததாரராக உள்ளார். இருக்கு 36 வயதான யுவராணி என்ற மனைவியும் இருந்துள்ளார். இவர் புஞ்சை புளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கோவையில் தங்கி இருந்து ஒப்பந்த வேலைகளை அருட்செல்வன் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யுவராணி, தங்களது 14 வயது மகனையும், 12 வயது மகளையும் தனி ஆளாக கவனித்து வந்துள்ளார். இதில் அவர்களுடைய மகன் சத்திய மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக அவன் பள்ளிக்கூட விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறான்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட விடுதியில் இருந்து வீட்டுக்கு மகன் வந்து உள்ளான். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாய் யுவராணியிடம், தான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன். விடுதிக்கும் செல்ல மாட்டேன் என சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது யுவராணி தனது மகனை பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத் தியதாகவும், நாளை காலை அப்பா வந்ததும் இதுபற்றி பேசி விடலாம் என்று கூறி சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில், எங்கே தன் தாய் மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் யுவராணியின் தலையில் சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக் செங்கல்) மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றை தூக்கிப்போட்டு தாக்கினான்.இதில் படுகாயம் அடைந்த யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாயை கொன்ற மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.