பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நகை திருட்டு - சிசிடிவியால் சிக்கிய தம்பதி
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வளையப்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி நகை மற்றும் பணம் வைத்திருந்த சர்மிளாவின் பையை திருடி சென்றது தெரியவந்தது.
சின்னாளபட்டியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் 4 பவுன் செயின் மற்றும் பணத்தை திருடிய வழக்கில் கணவன் - மனைவி கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி மையப்பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பெண்களுக்கான அனைத்து விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் சேர்ந்த சர்மிளா என்ற பெண் கடந்த (07.03.25) தேதி பிரசவத்திற்காக சின்னாளப்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது 09.03.25 அன்று பிரசவ வலி ஏற்பட்டு ஐசியு வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தினை தனியாக ஒரு அறையில் வைத்திருந்தனர். இதனை தெரிந்து கொண்ட பெண் ஒருவர் நகை பையை திருடி சென்றதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை சார்பாக வழக்கு கொடுக்கப்பட்டது. சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டிருந்த பெண்ணின் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வளையப்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி நகை மற்றும் பணம் வைத்திருந்த சர்மிளாவின் பையை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் சத்தியம் ஆகிய இருவரையும் சின்னாளபட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் திருடி சென்ற நகையினை மீட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சர்மிளாவிடம் ஒப்படைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

