மேலும் அறிய
மதுவுக்கு அடிமை..தினமும் துன்புறுத்தல்; மகனை கொன்ற தந்தை - தருமபுரி அருகே அதிர்ச்சி
கொலை செய்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த அக்காவின் கணவர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
தருமபுரி அருகே குடிபோதையில் வயதான தாய், தந்தையை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததால், தந்தையே மகனை கொலை செய்து புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த அக்காவின் கணவர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி அருகே தடங்கம் பகுதியை சேர்ந்த விவசாயியான கோவிந்தசாமி அவரது மனைவி திருப்பதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். மேலும் மகன் ஜெயவேலுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், மனைவியை விட்டு பிரிந்து தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான ஜெயவேல் அடிக்கடி குடித்து விட்டு வயதான தாய், தந்தையிடம் பணம் கேட்டு தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தடங்கம் அருகே உள்ள பதிகால்பள்ளத்தில் கோவிந்தசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அவரும் அவரது மனைவியும் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அங்கு குடிபோதையில் வந்த ஜெயவேல் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்கவில்லை எனில் கொன்று விடுவேன் என தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதால், மகன் தன்னை கொன்று விடுவான் என்ற அச்சத்தில் தாய் பயந்து அருகில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தந்தை கோவிந்தசாமியை கத்தியைக் காட்டி மிரட்டிய போது, அச்சமடைந்த கோவிந்தசாமி, அருகே இருந்த கடப்பாறையால் ஜெயவேலை தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த ஜெயவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
அதனையடுத்து கோவிந்தசாமி தனது மருமகனான சக்திவேலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேல், ஜெயவேலுவின் உடலை கைப்பற்றி யாருக்கும் தெரியாமல் தனது தோட்டத்திற்கு அருகே எரித்துவிடலாம் என முடிவு செய்து, குழித் தோண்டி அதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனது மகன் கொலை செய்யபட்டதை அறிந்த தாய் திருப்பதி கூச்சலிடவே அருகாமையில் இருந்தவர்கள் சம்பவத்தை அறிந்து அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜெயவேல் உடலை கைபற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை கொலை செய்த கோவிந்தசாமி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மருமகன் சக்திவேல் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த அதியமான்கோட்டை காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கடப்பாரையால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















