Crime: வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை - திருடன் சிக்கியது எப்படி?
பொம்மிடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 20 பவுன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளி கொள்ளை.
![Crime: வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை - திருடன் சிக்கியது எப்படி? Dharmapuri crime 20 pounds of gold jewelery and 200 grams of silver loot - TNN Crime: வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை - திருடன் சிக்கியது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/22/e5a0101274cee52cfdf1768b8065f89d1716361424365739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.பள்ளிப்பட்டி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த சின்னபாப்பா என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். மேலும் கணவர் உயிரிழந்த நிலையில், சின்ன பாப்பா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் ஆளில்லாத வீட்டில், இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து, கொள்ளையடித்து சென்றுள்ளனர். காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, சின்ன பாப்பா வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனைக் கண்ட பக்கத்து வீட்டில் உள்ள பிரதீபன் என்பவர் ஆந்திராவில் தங்கி இருந்த சின்னபாப்பாவிற்கு, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் வெளிக்கதவு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சின்ன பாப்பா மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததும், வீட்டுக்குள் இருந்த பூஜையறையில் உள்ள பீரோவின் மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சுமார் 20 சவரன் தங்க நகைகளும் சுமார் 200 கிராம் வெள்ளி நகைகளும் திருடும் போனது தெரிய வந்தது. இதுகுறித்து பொம்மிடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசரணை நடத்தியதில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமு என்கிற வரதன் என்பதும், பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர், கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் கைப்பற்றப்பட்டது. இது சின்னபாப்பா வீட்டில் திருடிய பொருட்கள் என்பதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து ராமு என்கிற வரதனை பொம்மிடி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ. 10 இலட்சம் மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட 20 சவரன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பொம்மிடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)