Crime : 'என் காதலிகிட்ட பேசுனதுக்காக கொலை செஞ்சேன்’ : இளைஞனை கொன்று சாக்கடையில் வீசிய கொடூரம்..
பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மனீஷ் டெல்லியில் உள்ள கஃபர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
தேசிய தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 22 வயது இளைஞர் ஒருவரை ஒரு ஆணும் அவரது நண்பரும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், கொலை செய்யப்பட்ட நபர் தனது காதலியுடன் பேசுவதை விரும்பவில்லை என்றும் அதனால் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான சஞ்சய் புச்சா மற்றும் 21 வயதான சீதாராம் சுதர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மனீஷ் டெல்லியில் உள்ள கஃபர் மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை எனப் புகார் எழுந்தது. இதை அடுத்து தேடுதல் வேட்டையில் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து பலியானவரின் உடல் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்டவரின் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்ததில், ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் தொடர்ந்து அவருடன் பேசியது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார், குற்றவாளியின் வீட்டில் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
டெல்லி டிசிபி ஸ்வேதா சௌஹானின் கூறுகையில் இரண்டு குற்றவாளிகளும் மனீஷைக் கொன்று அவரது உடலை வீசியதை ஒப்புக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட புச்சா மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கணினி உதவியாளராக பணிபுரிகிறார். சுருவைச் சேர்ந்த தனது காதலி மூலம் மனீஷுடன் தொடர்பு கொண்டதாக புச்சா போலீஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இறந்த மனீஷ் தனது காதலியுடன் நெருங்கிய உறவில் இருந்ததால் புச்சா அதிருப்தி அடைந்துள்ளார்.
இதை அடுத்து புச்சா வெள்ளிக்கிழமை அன்று மனீஷை தொடர்பு கொண்டு கரோல் பாக் பகுதியில் அவரை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். மனீஷ் அங்கு சென்றதும், புச்சா தனது காதலியின் தொடர்பு விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நீக்குமாறு கூறியுள்ளார். இதை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் மனீஷை தனது நண்பர் உதவியுடன் புச்சா கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க இறந்த உடலை சாக்கடையில் வீசியதாகத் தெரியவந்துள்ளது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் போலீஸார் இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.