Kabaddi: அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை: கபடி பயிற்சியாளர் மீது வீராங்கனை புகார்!
தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட போவதாக கூறி பணம் பறித்ததாகவும் வீராங்கனை குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லியில் கபடி பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் ஜோகிந்தர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பணம் பறித்ததாகவும், அந்தரங்க படங்களை கசியவிட போவதாகவும் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
புகார்:
இதையடுத்து, மேற்கு டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் காவல் நிலையத்தில் பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கபடி வீராங்கனை தெரிவிக்கையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மேற்கு டெல்லியில் உள்ள முண்ட்கா அருகே ஹிரன்குட்னாவில் கபடி போட்டிகளுக்கு தயாராகி வருவதாகவும், 2015-ம் ஆண்டு தனது பயிற்சியாளர் தனது அனுமதியின்றி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், 2018-ம் ஆண்டு தான் வென்ற போட்டியில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை தனக்கு தருமாறு பயிற்சியாளர் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் ஜோகிந்தரின் வங்கிக் கணக்கிற்கு ரூ .43.5 லட்சத்தை அவர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. கபடி வீராங்கனைக்கு 2021-ம் ஆண்டு திருமணம் நடந்ததாகவும், அவரது அந்தரங்க புகைப்படங்களை கசிய விடுவதாக மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கபடி பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது காவல் நிலையத்தில் வீராங்கனை புகாரளித்தார்
இந்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் மீது கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, டெல்லி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் புகார்தாரரின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.