மாமியாரை கொல்வது எப்படி?; யூடியூப் பார்த்து கதையை முடித்த மருமகள் - சிக்கியது எப்படி?
கிரைம் திரில்லரை மிஞ்சும் வகையில் மாமியாரை திட்டம் தீட்டி கொன்ற மருமகள். யூடியூப் பார்த்து இந்த கொலை அவர் அரங்கேற்றியுள்ளார்.

விளையாடலாம் என்று கூறி மாமியாரின் கண்களை கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே பெண்டுர்த்தி பகுதியில் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 63) என்பவர் தனது மகன் சுப்பிரமணியம், மருமகள் லலிதா தேவி (30), பேரக்குழந்தைகளுடன் அப்பன்னபாலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
சுப்பிரமணியம் மற்றும் லலிதாவுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் லலிதாவிற்கும் அவரது மாமியாருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
திருமணத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே குடும்ப உறவுகளைப் பாதித்தன. சண்டைகளால் சலித்துப்போன லலிதா, தனது மாமியாரைக் கொல்ல முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்வது எப்படி என்பதையும், கண்டறிவதைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொள்ள யூடியூப்பில் குற்ற வீடியோக்களைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லலிதா, கடந்த 6 ஆம் தேதி, ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலை, அவரது கணவர் வேலைக்குச் சென்றபோது, அவர் மாமியாரிடம் நடிக்க முடிவு செய்தார். லலிதா தனது குழந்தைகளிடம், பாட்டியிடம், கைகளைக் கட்டி, கண்களைக் கட்டச் சொல்லி, போலீஸ்-திருடன் விளையாட்டை விளையாடச் சொன்னார்.
பின்னர், மாமியார் மீது லலிதா பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துள்ளார். அலறி துடித்த ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். சத்தம் வெளியே தெரியக்கூடாது என்று டிவியில் ஒலியை அதிகமாக வைத்துள்ளார். ஆனால், புகை வந்ததால் அக்கம்பக்கத்தினர் கூடினர். உடனே, மின்கசிவால் ஜெயந்தி உயிரிழந்ததாக லலிதா கூறினார். ஆனால் பெட்ரோல் வாசனையைக் கவனித்த பின்னர் போலீசார் சந்தேகப்பட்டனர்.
லலிதாவை விசாரணை செய்தபோது, மாமியார் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததாகவும் கணவரிடம் தன்னைப் பற்றி குற்றம் சுமத்தி வந்ததாகவும் இதனால், அவரை கொலை செய்ய எண்ணி, யூடியூப் பார்த்து கொன்றதாகவும் கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக, அவரது கணவர் சுப்பிரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் லலிதாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் அனுப்பினர். இந்த சம்பவத்தில் பேத்திக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.




















