Cyber Crime: ஆன்லைனில் பகுதிநேர வேலை... பட்டதாரி பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடி
பொதுமக்கள் தங்கள் அறியாமையினால் லிங்கை தொட்டு மோசடி கும்பலுக்கு தங்களுடைய சுய விபரங்களை கொடுத்து விடுகின்றனர்.
தஞ்சாவூர்: ஆன்லைனில் பகுதிநேர வேலை என கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.19.75 லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டதாரி பெண்ணிற்கு வந்த மெசேஜ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சோந்தவர் 39 வயதான பட்டதாரி பெண். திருமணமான அந்த பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை. ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என மெசேஜ் வந்தது. இதனை நம்பிய அந்த தன்னை பற்றிய சுய விவரம் மற்றும் வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளார்.
போலியான இணையதளத்தின் லிங்க்
இதையடுத்து அந்த பெண்ணுக்கு ஒரு போலியான இணையதளத்தின் வழியாக லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கில் பிரபல இணைய வணிக நிறுவனத்தின் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு மதிப்பாய்வு செய்தல், ரேட்டிங் ஸ்டார், லைக் போன்ற முறையில் லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில் சிறிய லாபம்
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு பல்வேறு டாஸ்க்குகள் அட்டவணை முறைப்படி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அட்டவணையின்படி முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்து அனுப்பிய நிலையில் அவருக்கு ரூ.5 ஆயிரம் கிடைத்தது. இதனையடுத்து அவருக்கு அடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதனால் அந்த பெண் மீண்டும் ரூ.5 ஆயிரத்தை செலுத்தினார். அதில் அந்த பெண்ணுக்கு மீண்டும் ரூ.10 ஆயிரம் கிடைத்தது. தொடர்ந்து அந்த பெண் பல்வேறு தவணைகளில் ரூ. 19 லட்சத்து 75 ஆயிரத்து 89 அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண், வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசியவர் நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால்தான் உங்களுக்கான லாபம் கிடைக்கும் என்று கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.
சைபர் க்ரைம் போலீசில் புகார்
அப்போதுதான், தனக்கு மோசடி நடந்ததை உணர்ந்த அந்த பட்டதாரி பெண், இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது: சமூக வலைதளங்கள் வாயிலாக வேலை வாய்ப்பு, போலி கடன் செயலி போன்றவற்றில் இருந்து ஓடிபி கேட்கப்பட்டால் அதை தரக்கூடாது. தற்போது பொதுமக்களுக்கு அவர்களுடைய வாட்ஸ் அப் எண்கள் அல்லது மெசேஜ் ஆகியவற்றில் பகுதி நேர வேலை, வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் என்பது போன்ற செய்திகள் மோசடி கும்பல்களால் அனுப்பப்படுகிறது. மேலும் அதனுடன் சேர்த்து இணைய தள லிங்க் ஒன்றும் அனுப்பப்படுகின்றது.
பொதுமக்கள் தங்கள் அறியாமையினால் லிங்கை தொட்டு மோசடி கும்பலுக்கு தங்களுடைய சுய விபரங்களை கொடுத்து விடுகின்றனர். பின்னர் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உணவகங்கள், ஹோட்டல் போன்றவற்றுக்கு லைக் செய்து 5 ஸ்டார் ரேட்டிங் செய்தால் ஒரு லைக்கிற்கு 50 ரூபாய் வீதம் பணம் கொடுப்பதாக கூறி ஆரம்பத்தில் மோசடிக்காரர்களால் பணம் கொடுக்கப்படுகிறது.
அதை உண்மையென்று நம்பிய பிறகு பொதுமக்கள் அனுமதியில்லாமல் ஒரு குறிப்பிட்ட டெலிகிராம் குரூப்பில் அவர்கள் சேர்க்கப்பட்டு அந்த குழுவில் உள்ள போலி உறுப்பினர் மூலமாக தங்களுக்கு முதலீடு செய்வதால் இரட்டிப்பாக லாபம் கிடைப்பது போன்று போலியாக நம்ப வைத்து முதலீடு செய்ய வைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகை மோசடிகாரர்களுக்கு கிடைத்த பிறகு அவர்கள் குழுவிலிருந்து நீக்கப்பட்டு தொகை ஏமாற்றப்படுகிறது. எனவே இதுபோன்று வரும் மெசேஜ்களை நம்பி ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.