கொடுத்தது ரூ.5 லட்சம்; கேட்பது ரூ. 12 லட்சம்: கந்துவட்டி கொடுமையால் காவலர் தற்கொலை - சிக்கிய பெண்!
கடலூர் புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் முருகன் மகன் செல்வக்குமார் (வயது 27). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 1-ந் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்ற செல்வக்குமார், திடீரென மயங்கி விழுந்தார். இவரை கடலூர் புதுநகர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப செலவுக்காக செல்வக்குமார், ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனாலும் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததும், இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து விட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகோத்தமன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று செல்வக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றார். இதனிடையே செல்வக்குமார் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- எனது கடைசி மகன் செல்வக்குமார் கடந்த 4 ஆண்டுகளாக காவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர், பக்கத்து ஊரான பெரியநெல்லிக்கொல்லையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி அனிதா (35) என்பவரிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கினார். அதற்கு சான்றாக 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார். அந்த பணத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அசல், வட்டியுடன் அனிதாவிடம் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் செல்வக்குமார் கையெழுத்து போட்ட பத்திரத்தில் ரூ.12 லட்சம் தர வேண்டும் என்று அனிதா எழுதியுள்ளார்.
ரூ.12 லட்சத்தை கொடுத்து விடு, இல்லையெனில் இந்த பத்திரத்தை வைத்து உன்னுடைய வேலையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் தன்னுடைய வேலை பறி போய் விடுமோ என்ற அச்சத்தாலும், மன உளைச்சல் ஏற்பட்டதாலும் விஷம் குடித்து செல்வக்குமார் தற்கொலை செய்து விட்டார். ஆகவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அதன்பேரில் கந்து வட்டி கேட்டு மிரட்டல், தற்கொலைக்கு தூண்டியதாக அனிதா மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இருப்பினும் கந்து வட்டி கேட்டு பெண் மிரட்டியதால் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.