Crime: பேருந்தில் கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ கஞ்சா - மயிலாடுதுறையில் இளைஞர் கைது
பேருந்தில் இரண்டரை கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞரை மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வைத்து தனிப்பட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவு கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த போதிலும் காவல்துறையினர்களின் மண்ணைத் தூவியும், சில காவலர்களுக்கு கையூட்டு வழங்கியும், கஞ்சா கட்டுப்பாடு இன்றி பல இடங்களில் விற்பனை என்பது நடந்தேறி வருகிறது.
இந்நிலையில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில் 38க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, கைது நடவடிக்கைகளை மேற்கொண்டும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்த போதிலும் கஞ்சா விற்பனை என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக மயிலாடுதுறை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சென்னையில் இருந்து வந்த இளைஞர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த கைப்பையில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த தனிப்படை போலீசார் இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் நக்கீரர் தெருவை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் கணேஷ் என்பதும், சென்னை பாடியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதும், அவ்வப்போது சென்னையில் இருந்து கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளான். பேருந்தில் இளைஞர் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்