Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
”பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கழுத்தில் கிடந்த 9 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது”
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிரில். இவரது மனைவி ரோணிகா. இவர்களது குடும்பம் தெற்கு கள்ளிகுளம் செட்டியார் தெருவில் அமைந்துள்ளது. சிரில் தெற்கு சூடானில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மனைவி ரோணிகா வீட்டில் தனியாக இருந்துள்ளார், இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நேற்று காலை பட்டப்பகலில் 11 மணியளவில் வீட்டின் காம்பவுண்ட சுவர் ஏறி குதித்து உள்ளார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த ரோணிகாவை கத்தியை காட்டி மிரட்டி கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றுள்ளார். இது குறித்து ரோணிகா வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையடித்து சென்ற தங்கத்தின் மதிப்பு 5 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் உடல் முழுவதையும் மறைத்து கருப்பு ஆடை அணிந்து கொண்டு முகத்தையும், தலைலையும் மறைத்து கண் மட்டும் தெரியும் படி முகமூடி அணிந்து கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மறைந்து இருந்து பின்னர் சுவர் ஏறி குதித்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த வருடம் ஆசிரியர் ஒருவர் வீட்டின் முன்பாக நின்று கொண்டிருக்கும் பொழுது முகவரி கேட்பது போன்று நடித்து கழுத்தில் கிடந்த 7 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டது. அந்த சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வரை வள்ளியூர் காவல் துறையினரால் அந்த வழக்கு குறித்து கண்டுபிடிக்க முடியாமல் வழக்கு முடிக்கப்பட்டது. குறிப்பாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க அறிவுறுத்தப்பட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் தொடர்ச்சியாக சுற்றுவட்டார கிராமத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிரட்டி மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அரங்கேறி வருவது. காவல்துறையினர் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதோடு இதே போன்று கொள்ளை சம்பவங்கள் நடைபெறாதாவாறு குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கழுத்தில் கிடந்த 9 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.