Crime : கூகுளை பார்த்து மாத்திரை, சிகிச்சை.. பொறியியல் படித்துவிட்டு டாக்டர் வேலை.. போலி டாக்டர் சிக்கியது எப்படி?
சென்னையில் என்ஜினீயரிங் படித்துவிட்டு, கடந்த 8 ஆண்டாக டாக்டராக மருத்துவம் பார்த்து வந்து போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Crime : சென்னையில் என்ஜினீயரிங் படித்துவிட்டு, கடந்த 8 ஆண்டாக டாக்டராக மருத்துவம் பார்த்து வந்து போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்பியன். இவர் தமிழ்நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு தனது மேற்படிப்பு சான்றிதழை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்தார். அதேபோன்று தனது மருத்துவர் உரிமத்தை புதுப்பிக்க முயற்சி செய்தார். பலமுறை பதிவேற்றம் செய்ய முயற்சித்தாலும் இயலாததால், நேரடியாக சென்னைக்கு வந்தார்.
இதனால் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கு சென்று பிரச்சனையை சொல்லியிருக்கிறார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரின் ஆவணங்களை சரிபார்த்தபோது, இவரின் மருத்துவர் உரிமத்தை அதேபேரில் வேறு ஒருவர் புதுப்பித்திருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த அவர் செம்பியன் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளித்தார். இதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன் என்பவர் உண்மையான மருத்துவரின் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அவர் சில தகவல்களை தெரிவித்தார்.
விசாரணையில் அம்பலம்
சிறு வயதில் இருந்தே செம்பியனுக்கு மருத்துவர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. போதுமான பணம் இல்லாததால் அவர் ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தார். தனது பொறியியல் படிப்பை முடித்த இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்று நினைத்தார். இதனால் பல குறுக்கு வழிகளில் மருத்துவர் ஆக பல திட்டங்களை போட்டார்.
அதன்படி, தனது பெயரிலே யாராவது மருத்துவராக இருக்கார்களா என்று கூகுளில் தேடியுள்ளர். அப்போது தான் தஞ்சாவூரைச் சேர்ந்தவரை கண்டுபிடித்தார். இதனை அடுத்து, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மருத்துவர்கள் பட்டியலில் தனது பெயரை கொண்ட உண்மையான மருத்துவர் செம்பியனின் மருத்துவ சான்றிதழ் எடுத்து அதில், இவரின் புகைப்படம், முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.
கூகுள் உதவியுடன் மருத்துவம்
இதுமட்டுமின்றி, ஒரு மருத்துவமனை வைத்து மருத்துவம் பார்த்திருக்கிறார். சென்னை தரமணியில் மருந்தகத்துடன் கூடிய ஒரு மருத்துவமனை நடத்தி வந்திருக்கிறார். கடந்த எட்டு வருடங்களாக அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கூகுள் மூலம் படித்து மாத்திரை, மருந்து கொடுத்து மருத்துவம் செய்து வைத்திருக்கிறார்.
மேலும் கொரோனா காலத்திலும் பலருக்கு சிகிச்சை வழங்கியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிந்தது. என்ஜினீயரிங் படித்த ஒருவர் பல ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.