Crime: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை - திருவண்ணாமலை அருகே சோகம்
திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராஜ் வயது (35). இவருடைய மனைவி சூர்யா வயது (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு லக்சன் வயது (4), உதயன் வயது (1) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சின்ராஜ் கனலாபாடி ஊராட்சி செயலாளராகவும், சூர்யா சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகவும்பணியாற்றி வருகின்றனர். இதில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் சின்ராஜ், மனைவி சூரியா ஆகியோரிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மீண்டும் சின்ராஜ் சூரியாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு சின்ராஜ் தனது நண்பர் திருமணத்திற்காக திண்டிவனம் சென்றுவிட்டு இரவு 12 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு சின்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்த பொழுது தனது மனைவி மற்றும் இரு மகன்கள் இல்லாமல் அறையும் திறந்திருந்தது. இதுகுறித்து தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு அவர்களின் உதவியுடன் கிராம முழுக்க தேடி அலைந்த சின்ராஜ் கிணற்றின் அருகே செல்போன் ஒலிப்பதை கண்டு கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் குதித்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில் சூர்யா மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 1 வயது கொண்ட உதயன் உடலை தீயணைப்புத் துறையினர் சுமார் 5 மணி நேரமாக கிணற்றில் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் சின்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் இரண்டு மகன்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.