Crime: 'என்னை கல்யாணம் பண்ணு..' ஓடும் ஆட்டோவில் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் - ஒருதலைக் காதலால் விபரீதம்!
தான் காதலித்து வந்த உறவுக்காரப் பெண் வேறு நபருடன் திருமணம் செய்விருந்ததை ஏற்க முடியாமல், ஓடும் ஆட்டோவில் அவரது கழுத்தை அறுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் ,குன்னூரைச் சேர்ந்தவர் ராஹிலா (வயது 25). பிஎஸ்சி படித்து முடித்துள்ள இவர் அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். மேலும், புதுப்பாளையம் பகுதியில் தோழியுடன் அறை எடுத்து தங்கியிருந்த ராஹிலா தினமும் பள்ளி பேருந்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி ராஹிலாவை அவரது பெரியம்மா மகன் ஜீவா (வயது 35) பள்ளிக்கு சென்று சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவரும் ராஹிலா தங்கியிருந்த பகுதியில் இருந்து ஆட்டோவில் அந்தியூர் பேருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.
கழுத்தை அறுத்த இளைஞன்:
அப்போது செல்லும் வழியிலேயே ஜீவா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஹிலாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த ஜீவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஹிலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். தொடர்ந்து ராஹிலா ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த நிலையில், ஓட்டுநர் உடனடியாக ஆட்டோவை காவல் நிலையத்தை நோக்கி ஓட்டியுள்ளார்.
ஆனால் ஜீவா ஆட்டோவில் இருந்து குதித்து தப்ப முயன்ற நிலையில், பொது மக்கள் அவரை விரட்டிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது ராஹிலா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
லண்டனில் வேலை:
இந்நிலையில், காவல் துறையினர் விசாரணையில் நீலகிரி, கூடலூர் முக்கூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா எம்ஏ முடித்துள்ளதும், லண்டனில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், ”ராஹிலாவுக்காக கூடலூர் பகுதியில் 10 லட்சத்தில் ஒரு வீட்டையும் 20 சென்ட் நிலத்தையும் முன்னதாக வாங்கியுள்ள ஜீவா, அவரை திருமணம் செய்வதற்காக மூன்று ஆண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியதுடன் அங்கு கடுகு, ஏலம் விவசாயமும் செய்து வருகிறார். இந்துவான ஜீவா, தன் தாய் ஜெரினா சார்ந்த இஸ்லாமிய மத வழக்கப்படி தனது சித்தி மகளான ராஹிலாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இதனை இவர்களது பெற்றோர் ஏற்காத நிலையில், ராஹிலாவுக்கு 15 நாள்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் பேசி நிச்சயம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தியூரில் இருந்து புறப்பட்டு ராஹிலாவை சந்தித்து திருமணம் செய்து கொள்ள ஜீவா அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ராஹிலா மறுப்பு தெரிவித்த நிலையில், ராஹிலாவின் கழுத்தை அறுத்து ஜீவா கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜீவாவை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.