(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: புதையலுக்காக நரபலி... நண்பனையே கொலை செய்த நபர்... ஒசூர் அருகே பயங்கரம்!
லட்சுமணனின் உடலை குழியில் தள்ளி மணி நரபலி பூஜைகளை செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காத நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
புதையல் தோண்டி எடுப்பதற்காக நண்பனைக் கொன்று நரபலி கொடுத்த காவலாளி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். செப்டெம்பர் 28ம் தேதி தனது விவசாயத் தோட்டத்தில் லட்சுமணன் சந்தேகத்துக்கு உரிய முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.
இந்நிலையில் அவரது உடலை மீட்டு கெலமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் லட்சுமணனின் நண்பரான மணி என்பவர், புதையல் எடுப்பதற்காக லட்சுமணனை நரபலி கொடுத்தது கண்டறியப்பட்டது.
லட்சுமணனின் விவசாயத் தோட்டத்தில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியதை அப்படியே நம்பிய நண்பர்கள் இருவரும், முன்னதாக மெய்சேரியைச் சேர்ந்த பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் அமாவாசை அன்று குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண் வராததால் கோழியை பலியிட்டு இருவரும் பூஜையைத் தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென மணி மீது பாய்ந்த லட்சுமணன் அவரது தொண்டையைக் கடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் சுதாரித்துக் கொண்ட மணி கீழே கிடந்த கட்டையை எடுத்து லட்சுமணனை பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து லட்சுமணனின் உடலை குழியில் தள்ளி மணி நரபலி பூஜைகளை செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காத நிலையில், அங்கிருந்து தான் தப்பியோடியதாக காவல் துறையினரிடம் மணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் ஒசூர் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்திற்குட்பட்ட மலக்பூர் கிராமத்தில் தன் தம்பி மகனை தம்பதியினர் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மலக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் தன் 18 மாத ஆண் குழந்தை காணாமல் போனதை அடுத்து தேடி வந்துள்ளார். பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்புத் தோட்டத்தில் ஒரு குழந்தை ஒன்றின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை தான் அது என்று தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்து இருந்ததும், மீண்டும் சகோதரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பமடைந்ததும், குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டி அவர்கள் சாமியார் ஒருவரைச் சந்தித்ததும், அவர் நரபலி கொடுக்க் கோரியதும் தெரிய வந்ததும்
இதையடுத்து அவர்கள் தனது தம்பி மகன் குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ரமேஷ் குமாரின் அண்ணன் அவரது மனைவி இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.