சந்தேகத்தால் 6 வயது மகனை கிணற்றில் தள்ளிவிட்டு கொன்ற தந்தை கைது - தென்காசியில் பயங்கரம்
தான் பெற்ற மகனை சந்தேகத்தின் பேரில் தந்தையே கிணற்றுள் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் முனியாண்டி. இவர் இந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். முனியாண்டிக்கு திருமணமாகி கார்த்திகை செல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது. இவர்கள் தென்மலையில் உள்ள செல்லப்பாண்டியன் தெருவில் வசித்து வருகின்றனர். மேலும் மகிழன் அருகில் உள்ள செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி நின்ற மகிழனை அப்பா முனியாண்டி பள்ளிக்கு அழைத்துக் கொண்டு சென்று பள்ளியில் விட்டு விட்டு பின்பு வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின் பள்ளியில் மகிழனின் புத்தகப் பையை வைத்து விட்டு மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்றுள்ளார். அதன்பின் இருவருமே வீடு திரும்பாத நிலையில் மனைவி கார்த்திகை செல்வி பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அதன்பின் மகிழனை காணவில்லை என அனைவரும் தேட ஆரம்பித்துள்ளனர். பின் கார்த்திகை செல்வி அருகே உள்ள சிவகிரி காவல் நிலையத்தில் சென்று புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேட ஆரம்பித்தனர். குறிப்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மகிழனை அவரது அப்பா முனியாண்டி அழைத்துச் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து முனியாண்டியின் செல்போன் அலைவரிசையை வைத்து தேடினர்,. அப்போது முனியாண்டியின் டவர் லொகேஷன் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் காண்பித்ததை அடித்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனியாண்டி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அதன்பின் முனியாண்டியை பிடித்து விசாரித்த போது, மகிழனை அழைத்து சென்று கிணற்றின் அருகே இருந்து மது அருந்திய நிலையில் மகன் மகிழனை நான் தான் கிணற்றுக்குள் தள்ளி விட்டுக்கொன்றேன் என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் எதற்காக கொலை செய்தாய் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் முனியாண்டியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு பெண்களுக்கிடையே வாய் வார்த்தை ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் அந்த பெண் மனைவி கார்த்திகை செல்வியை பார்த்து இது உனக்கு பிறந்த பிள்ளையா என கூறியதை முனியாண்டி கேட்டுள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் மகிழன் உன்னுடைய மகன் இல்லை என சுற்றியுள்ளவர்கள் கூறியதாகவும், அதனால் தான் மகிழனை கிணற்றுக்குள் தள்ளி விட்டு கொலை செய்ததாகவும் முனியாண்டி ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முனியாண்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்த பொழுது தன்னுடைய மகனை புளியங்குடி அருகே உள்ள நவாச்சாரியார் பகுதியில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக அந்த இடத்தை அடையாளம் காட்டினார். அதனையடுத்து சிவகிரி காவல்துறையினர் வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மகிழனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் முனியாண்டியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். தான் பெற்ற மகனை சந்தேகத்தின் பேரில் தந்தையே கிணற்றுள் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.