அடுத்த வீட்டு நபரின் வேலிக்கு தீ வைப்பு....சீர்காழி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவயின் கணவர் வெறிச்செயல்
சீர்காழி அருகே தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தனது வீட்டின் அருகில் உள்ள இடத்தை கேட்டு வேலிக்கு தீ வைத்து இடத்தின் உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.கவை சேர்ந்த அன்புமணி என்பவர் இருந்து வருகிறார். இவரது கணவரும் முன்னாள் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின் அனுபவத்தில் 40 ஆண்டுகளாக இருக்கும் இடத்தை கேட்டு தொடர்ந்து சண்டை இட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மணிமாறன் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து பிரகலாதனுக்கு சொந்தமான இடத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த வேலையை தீ வைத்துக் கொளுத்தி, பிரகலாதனையும் அவர் தந்தை மணியையும் கட்டையால் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகலாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சூழலில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிமாறன் பிரகலாதன் குடும்பத்தினரை அடித்து விரட்டும் காட்சிகளும், வேலியை தீ வைத்துக் கொள்ளும் காட்சியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதனை பார்க்கும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து கட்சி மேலிடம் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட சாராய வியாபாரி கைது. சாராயம் மற்றும் சாராயத்தில் போதையை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்திய 'அட்ரோபின்" ஆகியவற்றை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல்துறையினர் நடவடிக்கை.
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் முற்றிலும் கள்ளச் சாராய வியாபாரத்தை ஒழிப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து நேற்று காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஆனதாண்டவபுரம் ரயிலடித்தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் ராஜதயாளன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது அந்த சாராயத்தில் விஷ நெடி வீசியதால் அவரது வீட்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 'அட்ரோபின்' எனும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் போதை மருந்தை அனுமதி இன்றி வைத்திருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சாராயத்தில் மேலும் அதிக போதைக்காக இந்த போதை மருந்தை கலந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தில் 750 மில்லி மாதிரி எடுத்து அதனை தஞ்சை பகுப்பாய்வு கூட அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ராஜதயாளன் மீது விஷ சாராய வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.